புதுச்சேரி: புதுச்சேரியில் மீனவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கிறது. மீனவர்கள் தயக்கமின்றி போராட்டம் நடத்த முன்வர வேண்டும் என வைத்திலிங்கம் எம்.பி தெரிவித்துள்ளார்.
மீனவர் காங்கிரஸ் ஆலோசனை கருத்துகேட்பு கூட்டம் புதுச்சேரி வைசியால் வீதியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் மாநிலத் தலைவர் வைத்திலங்கம் எம்.பி தலைமை தாங்கினார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி மற்றும் மீனவர் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வைத்திலிங்கம் எம்.பி பேசியதாவது: புதுச்சேரியில் மீனவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கிறது.
கடல் அரிப்பால் பிள்ளைச்சாவடியில் சுடுகாடே இல்லாமல் போய்விட்டது. கோயில் சுவரிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிள்ளைச்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் கற்கள் கொட்டுவதாக அரசு தரப்பில் சொல்கின்றனர். ஆனால், அவர்கள் சொல்லி இரண்டு வருடம் ஆகிறது. இதுவரை ஒரு கல்லைக்கூட கொட்டவில்லை. ஒப்பந்ததாரரிடம் விடாமல் ஊர் பஞ்சாயத்தாரிடம் பணத்தை கொடுங்கள் அவர்களே கற்களை கொட்டுவார்கள் என்று நான் கூறினேன். ஆனால், அதனையும் அரசாங்கத்தில் உள்ளவர்கள் காதில் வாங்கவில்லை. இதற்கு என்ன காரணம் என்றால் டெண்டர் விட்டால்தான் பணம் வரும். அதனால் தான் அந்த வேலையை பார்க்கின்றனர்.
மீனவர்கள் வசிக்கும் இடத்துக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். கடல் அரிப்பால் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தூண்டில்முள் வளைவு கேட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேங்காய்த்திட்டில் முதல்வர் அடிக்கல் நாட்டினார். இங்கு என்ன வசதி கிடைக்கும் என்று கேட்கும்போது, என்னென்ன வசதி வேண்டுமோ அது எல்லாம் கிடைக்கும் என்கின்றார். என்ன வசதிகள் கிடைக்கும் என்பதைக் சொல்லக்கூட அவருக்கு தெரியாது. அந்த ஒப்பந்தத்தால் தமக்கு என்ன கிடைக்கும் என்பது மட்டும் தான் அவருக்குத் தெரியும்.
» பொள்ளாச்சி: கேரளாவுக்கு கடத்த முயன்ற 30 கிலோ சந்தனக் கட்டைகள் பறிமுதல்
» கந்த சஷ்டி விழா நிறைவாக சென்னிமலை முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்
அரிசி கொடுத்தீர்களா என்று கேட்டால்? அங்கிருந்து ஓடுகிறார். இதுதான் முதல்வரின் நிலைப்பாடு. இதற்கெல்லாம் காரணம் மீனவ சமுதாயத்தில் போராடும் குணம் வரவில்லை. உங்களுக்குள்ளேயே ஒரு பயத்தை ஏற்படுத்திக் கொள்கிறீர்கள். மக்களுக்குத் தெரியும் வகையில் தயக்கமின்றி போராட்டத்தை பொதுவெளியில் நடத்த முன்வர வேண்டும்.
உங்கள் பகுதிக்குள்ளேயே போராட்டத்தை நடத்தக்கூடாது. டெல்லியில் இருந்து மத்திய அமைச்சர் தேங்காய்திட்டு துறைமுகத்துக்கு ஆய்வு செய்வதாக வந்தார். ஆனால், அவர் ஆய்வு செய்தாரா? இல்லை. மீனவர்கள் கும்பலாக இருந்து கேள்வி எழுப்ப வேண்டும். மீனவர்கள் வெளிச்சத்துக்கு வர வேண்டும். உங்களின் போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும். அவ்வாறு வலுப்படுத்தினால் தான் உங்களது குரல் வெளியே தெரியும். அப்படி வலுப்படுத்தாவிட்டால் தெரியாது. இவ்வாறு அவர் பேசினார்.