சென்னையில் ‘முதல்வர் மருந்தகம்’ - நவ.20-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

By KU BUREAU

சென்னை: சென்னை மாவட்டத்தில் ‘முதல்வர் மருந்தகம்’ அமைக்க நவ.20-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து, சென்னை மண்டல கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த ஆக.15-ம் தேதி தனது சுதந்திர தின விழா உரையில், “பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும் பிறமருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1000 ‘முதல்வர் மருந்தகம்’ தொடங்கப்படும்“ என அறிவித்தார்.

அதன்படி, ‘முதல்வர் மருந்தகம்’ அமைக்க விருப்பமுள்ள பி.பார்ம், டி.பார்ம் சான்று பெற்றவர்கள் அல்லதுஅவர்களின் ஒப்புதலுடன் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ‘முதல்வர் மருந்தகம்’ அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் நவ.20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

‘முதல்வர் மருந்தகம்’ அமைக்க விருப்பம் உள்ளவர்களுக்கு 110 சதுரஅடிக்கு குறையாமல் சொந்த இடம் அல்லது வாடகை இடம் இருக்க வேண்டும். சொந்த இடம் எனில் அதற்கான சான்றிதழ்களான சொத்து வரி அல்லதுகுடிநீர் வரிஅல்லது மின் இணைப்பு ரசீது,வாடகை இடம் எனில் இடத்துக்கான உரிமையாளருடன் போடப்பட்ட ஒப்பந்தப்பத்திரம் பெற்று விண்ணப்பத்துடன் இணைத்து விண்ணப்பிக்கலாம்.

‘முதல்வர் மருந்தகம்’ அமைக்கும் தொழில் முனைவோருக்கு அரசு மானியம் ரூ.3 லட்சம் இரு தவணைகளாக ரொக்கமாகவும் மருந்துகளாகவும் வழங்கப்படும். கூடுதல் நிதி தேவைப்படும் நிலையில் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் பெற வழிவகை செய்யப்படும். டாபெட்கோ, தாட்கோ மற்றும் டாம்கோபயனாளிகளும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்குப் பயிற்சி அளித்து முதல்தவணை மானியத் தொகை ரூ.1.50லட்சம் விடுவிக்கப்படும். ‘முதல்வர் மருந்தகம்’ அமைக்க தேர்வு செய்யப்படும் தொழில் முனைவோர் முதல்வர் மருந்தகத்துக்கு உட்கட்டமைப்பு வசதிகளான ரேக்குகள், குளிர்சாதனப் பெட்டி, ஏசி மற்றும் மருந்துகள் வைப்பதற்கான பெட்டிகள் நிறுவப்பட்ட பிறகு இறுதிக்கட்ட மானியம் ரூ.1.50 லட்சம் மதிப்புக்கு மருந்துகளாக வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE