கோயம்பேடு காய்கறி சந்தையில் கிலோ ரூ.65-க்கு விற்பனை: தமிழகத்தில் பெரிய வெங்காயம் விலை அதிகரிப்பு

By KU BUREAU

சென்னை: கோயம்பேடு சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை கிலோ ரூ.65 ஆக உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனை சந்தைகளில் கிலோ ரூ.100 ஆகவும், பண்ணை பசுமை கடைகளில் ரூ.72 ஆகவும் உயர்ந்துள்ளது.

தேசிய அளவில் வெங்காய உற்பத்தியில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. மொத்த வெங்காய உற்பத்தியில் 30.41 சதவீதத்தை மகாராஷ்டிர மாநிலம் வகிக்கிறது.

அடுத்தபடியாக கர்நாடகா 15.51 சதவீதம், மத்திய பிரதேசம் 13.66 சதவீதம் வகிக்கின்றன. தமிழகம் 1.65 சதவீத விளைச்சலுடன் 13-வது இடத்தில் உள்ளது. இதனால் தமிழகத்தின் வெங்காய தேவைக்கு மகாராஷ்டிர மாநிலத்தையே நம்பியிருக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது.

கோயம்பேடு சந்தையில் கடந்த 2 மாதங்களாக பெரிய வெங்காயம் கிலோ ரூ.40-க்கு மேல் ஏற்ற இறக்கத்துடன் மொத்த விலையில் விற்கப்பட்டு வந்தது. சில்லறை விற்பனை சந்தைகளில் கிலோ ரூ.75 வரை உயர்ந்தது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக கோயம்பேடு சந்தைக்கு வெங்காயம் வரத்து குறைந்து வருகிறது.

இதனால் நேற்றைய நிலவரப்படி கோயம்பேடு மொத்த விற்பனை சந்தையில் கிலோ ரூ.65-க்கும், சில்லறை விற்பனையில் ரூ.70 முதல் ரூ.90 வரையும் விற்கப்பட்டு வருகிறது. டியூசிஎஸ் பண்ணை பசுமைக் கடைகளில் கிலோ ரூ.72-க்கு விற்கப்படுகிறது. திருவல்லிக்கேணி ஜாம்பஜார், அரும்பாக்கம். பெரம்பூர், மயிலாப்பூர் ஆகிய சில்லறை விற்பனை சந்தைகளில் கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்கப்பட்டு வருகிறது. வெங்காய விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

கோயம்பேடு சந்தையில் தக்காளி கிலோ ரூ.23, உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட் தலா ரூ.30, கத்தரிக்காய் ரூ.10, பீன்ஸ், பாகற்காய், நூக்கல் தலா ரூ.20, அவரைக்காய் 25, முள்ளங்கி, வெண்டைக்காய், முருங்கைக்காய், புடலங்காய் தலா ரூ.15, சாம்பார் வெங்காயம் ரூ.35 என விற்கப்பட்டு வருகிறது.

பெரிய வெங்காயம் விலை உயர்வு தொடர்பாக கோயம்பேடு காய்கறி வியாபாரி சுகுமார் கூறியதாவது:

மகாராஷ்டிரா தேர்தல்: தற்போது மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கிலேயே கிலோ ரூ.60 முதல் ரூ.80 வரையும், கர்நாடக மாநிலம் பெல்லாரியில் ரூ.50, ஆந்திர மாநிலத்தில் ரூ.40-க்கும் வெங்காயம் விற்கப்படுகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போது தேர்தல் நடந்து வருகிறது. அதனால் தொழிலாளர்கள் பலர் பிரச்சாரத்துக்கு சென்றுவிடுவார்கள் என்பதால், வழக்கமான தொழிலாளர்கள் கிடைப்பதில் சிரமம் உள்ளது.

மேலும் தற்போது பெரிய வெங்காயத்தின் 2-வது பருவ பயிர் முடிவுக்கு வரும் நேரம். இது மட்டுமல்லாது பெல்லாரி பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதன் காரணமாக கோயம்பேடு சந்தைக்கு பெரிய வெங்காயம் வரத்து குறைந்து, விலை உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE