ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களின் சொத்துகளை முடக்க நடவடிக்கை: புதிய சட்டத்தை கையிலெடுத்த காவல்துறை

By KU BUREAU

சென்னை: புதிய சட்டப்படி, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களின் சொத்துகளை முடக்கும் நடவடிக்கையில் சென்னை போலீஸார் இறங்கி உள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜுலை 5-ம் தேதி வியாசர்பாடியில் உள்ள அவரது வீட்டருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இக்கொலை வழக்கில், மறைந்த பிரபல ரவுடியான ஆற்காடு சுரேஷின் தம்பி ராணிப்பேட்டை மாவட்டம் பொன்னை பகுதியைச் சேர்ந்த பொன்னை பாலு(39), அவரது கூட்டாளிகள் குன்றத்தூரைச் சேர்ந்த திருவேங்கடம்(33) உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும், இக்கொலையின் பின்னணியில் இருந்ததாக, வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன் மற்றும் திமுக, அதிமுக, பாஜக, தமாக கட்சிகளை சேர்ந்தவர்கள், ரவுடிகள், வழக்கறிஞர்கள் என மொத்தம் 27 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இவர்களில் பொன்னை பாலு உட்பட 10 பேர் முதல்கட்டமாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

அதன் தொடர்சியாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பழைய வண்ணாரப்பேட்டை ஹரிகரன்(27), திருவல்லிக்கேணி மலர்கொடி(49), திருநின்றவூர் சதீஷ்குமார்(31), திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஹரிஹரன்(37), புளியந்தோப்பு அஞ்சலை(51), சென்னை காமராஜர் சாலை சிவா(35), பெரம்பூர் பிரதீப்(28), கோடம்பாக்கம் முகிலன்(32), விஜயகுமார் என்ற விஜய்(21), விக்னேஷ் என்ற அப்பு (27), ராஜேஷ்(40), செந்தில்குமார்(27), வியாசர்பாடி அஸ்வத்தாமன்(31), ரவுடி பொன்னை பாலு மனைவி ராணிப்பேட்டை பொற்கொடி(40), கே.கே.நகர் கோபி(23) ஆகிய மேலும் 15 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் பிரபல ரவுடியான சம்பவம் செந்தில், மொட்டை கிருஷ்ணன் உட்பட 3 பேரை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர். இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் சுமார் 5 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை போலீஸார் தாக்கல் செய்தனர்.

இதற்கிடையே, புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள 'பி.என்.எஸ்.107' சட்ட பிரிவின்படி கொலையாளிகளின் சொத்துகளை பறிமுதல் செய்ய காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. முன்பு, அமலாக்கத் துறைக்கு மட்டுமே இருந்துவந்த இந்த அதிகாரம், தற்போது போலீஸாருக்கும் வழங்கப்பட்டு உள்ளது. இந்தச் சட்டத்தை பயன்படுத்தி ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளில் செம்பியம் போலீஸார் இறங்கி உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE