கோடநாடு விவகாரத்தில் அவதூறு; பழனிசாமிக்கு மான நஷ்டஈடாக தனபால் ரூ.1.10 கோடி வழங்க உத்தரவு

By KU BUREAU

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் பழனிசாமியை தொடர்புபடுத்தி பேசிய தனபால் மான நஷ்டஈடாக அவருக்கு ரூ.1.10 கோடி வழங்க உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், பழனிசாமியை தொடர்புபடுத்தி பேசக்கூடாது என்றும் தடை விதித்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக பணிபுரிந்தவர் கனகராஜ். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த இவர், சாலை விபத்தில் உயிரிழந்தார். இவரது சகோதரர் தனபால், கோடநாடு சம்பவத்தில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமியை தொடர்புபடுத்தி பேசியிருந்தார்.

இந்நிலையில், அவருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் பழனிசாமி அவதூறு வழக்கு தொடர்ந்தார். ‘எனது நற்பெயர், புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், சில அரசியல் எதிரிகளின் தூண்டுதலின்பேரில் பொய்யான, அவதூறான கருத்துகளை தனபால் தெரிவித்து வருகிறார். கோடநாடு வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச அவருக்கு தடை விதிக்க வேண்டும். மான நஷ்டஈடாக ரூ.1.10 கோடி வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று அதில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கில் பழனிசாமியின் சாட்சியங்களை வழக்கறிஞர் ஆணையர் எஸ்.கார்த்திகை பாலன் பதிவு செய்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்எம்டி டீக்காராமன், ‘கோடநாடு வழக்கில் மனுதாரரான பழனிசாமியை தொடர்புபடுத்தி பேசிய தனபால் ரூ.1.10 கோடியை மான நஷ்டஈடாக பழனிசாமிக்கு வழங்க வேண்டும். இந்த சம்பவத்தில் இனிமேல் பழனிசாமியை தொடர்புபடுத்தி பேசக்கூடாது’ என்று தனபாலுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE