புதிய தமிழகம் பேரணிக்கு அனுமதி மறுப்பு: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிருஷ்ணசாமி கைது

By KU BUREAU

அருந்ததியருக்கான உள் இடஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரி சென்னையில் நடைபெறவிருந்த புதிய தமிழகம் கட்சி பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டால் தேவேந்திர குல வேளாளர் மற்றும் ஆதிதிராவிட மக்களின் உரிமை பறிக்கப்படுவதைக் கண்டித்தும், அந்த இடஒதுக்கீட்டை மீட்டெடுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி நவ.7-ம் தேதி விழிப்புணர்வு பேரணி நடைபெறும் என்று புதிய தமிழகம் கட்சி அறிவித்தது. அதற்கு காவல்துறை அனுமதியும் பெறப்பட்டது.

அதன்படி, நேற்று காலை முதலே புதிய தமிழகம் கட்சியினர் விளையாட்டு அரங்கம் அருகே திரண்டனர். அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி 11.50 மணியளவில் அங்கு வந்தார். அப்போது அங்கிருந்த போலீஸார் பேரணிக்கு அனுமதி இல்லை என்று தெரிவித்தனர். இதையடுத்து கிருஷ்ணசாமிக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது மழையும் பெய்து கொண்டிருந்தது. திடீரென சாலையின் நடுவே படுத்து அவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அவரது கட்சியினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது செய்தியாளர்களிடம் கிருஷ்ணசாமி கூறும்போது, “எங்கள் கட்சி சார்பில் பேரணி நடத்துவதற்கு காவல்துறையினரிடம் கடந்த மாதம் 25-ம் தேதியே அனுமதி பெற்றுவிட்டோம். இந்த நிலையில் இன்று திடீரென பேரணி நடத்த அனுமதியில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த இடத்தில்தான் எல்லா கட்சியினரும் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். ஆனால், எங்களுக்கு மட்டும் அனுமதி மறுப்பது நியாயமல்ல.

அருந்ததியருக்கு 3 சதவீதம் உள் இடஒதுக்கீடு 2009-ம் ஆண்டு கருணாநிதி ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டது. இதனால் தேவேந்திர குல வேளாளர் மற்றும் ஆதிதிராவிடர்கள் இழந்த இடஒதுக்கீட்டு உரிமையை மீ்ட்டெக்கும் வகையிலான இப்போராட்டம் நடைபெற்றால், திமுக ஆட்சி செய்யும் தவறு பொதுமக்களுக்கு தெரிந்துவிடும் என்பதற்காகவே எங்கள் பேரணிக்கு அனுமதி மறுத்துள்ளனர். இது கடும் கண்டனத்துக்குரியது” என்று தெரிவித்தார்.

அதையடுத்து அனுமதியின்றி பேரணியில் ஈடுபட முயன்றதால் கிருஷ்ணசாமி உட்பட நூற்றுக்கணக்கானோரை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE