திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படாதா என எதிர்பார்க்கும் அதிமுக, பாஜக: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

By KU BUREAU

பல அணிகளாக சிதறி கிடக்கும் அதிமுகவும், யாருமே சீண்டாத பாஜகவும் திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படாதா என்று எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

தஞ்சாவூரி்ல் நேற்று நடைபெற்ற திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் அவர் பேசியதாவது: இந்தியாவிலேயே தமிழகத்தில் நடைபெறும் திராவிட மாடல் ஆட்சிதான் சிறப்பான ஆட்சி என்று பலரும் கூறுகிறார்கள். திராவிட மாடல் ஆட்சியைப் பின்பற்றிதான் பல மாநிலங்களில் ஆட்சி நடைபெற்று வருகிறது.

திராவிட மாடல் ஆட்சியின் தொடர் வெற்றிகள் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளன. திமுகவை அழிக்க வேண்டும் என்று பலர் வரிசையாக கிளம்பி வருகின்றனர். அவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. மக்களே பதில் கூறுவர்.

பல அணிகளாக சிதறிக் கிடக்கும் அதிமுகவும், யாருமே சீண்டாத பாஜகவும், திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படாதா என்று எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. அவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக பதில் கூறிவிட்டார். நமது கூட்டணி கட்சித் தலைவர்களும் திமுக கூட்டணியில்தான் தொடர்வோம் என்று உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெல்ல வேண்டும் என முதல்வர் கூறியுள்ளார். அதற்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டும். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைந்து, 2-வது முறையாக ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்பார். 7-வது முறையாக திமுக ஆட்சி அமையும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், அமைச்சர்கள் கோவி.செழியன், எஸ்.எஸ்.சிவசங்கர், அன்பில் மகேஸ், டிஆர்பி.ராஜா, எம்.பி. ச.முரசொலி மற்றும் எம்எல்ஏ-க்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி அலுவலகம் திறப்பு விழா, தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் மறைந்த முரசொலி செல்வம் படத் திறப்பு விழா ஆகியவற்றில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE