விமானப் பயணத்தில் விடாமல் அழுது கொண்டிருந்த குழந்தையை, சமூக நலத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் தாலாட்டுப் பாடி தூங்க வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு சென்னை புறப்பட்டுச் சென்ற இண்டிகோ விமானத்தில் ஒரு இளம் தம்பதி, தங்களது கைக்குழந்தையுடன் பயணம் செய்தனர். இரண்டு வயது மதிக்கத்தக்க அந்தக் குழந்தை விமானம் புறப்படும் வரை அமைதியாக இருந்தது. ஆனால், விமானம் மேலெழும்பத் தொடங்கியதும் குழந்தை அழத் தொடங்கியது. குழந்தையின் அழுகையை நிறுத்த பெற்றோரும், அருகில் இருந்த பயணிகளும் முயற்சி செய்தனர். ஆனால், முடியவில்லை.
அதே விமானத்தில் பயணம் செய்த, தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் எழுந்து வந்து, குழந்தையை வாங்கித் தன் மடியில் வைத்து தாலாட்டு பாடத் தொடங்கினார். அமைச்சரின் தாலாட்டுப் பாடலைக் கேட்ட குழந்தை சில நிமிடங்களிலேயே அழுகையை நிறுத்திவிட்டது. அடுத்த சில நிமிடங்களில் அமைச்சர் கீதாஜீவனின் மடியிலேயே குழந்தை தூங்கிவிட்டது. பிறகு குழந்தையை தாயிடம் ஒப்படைத்த அமைச்சர் கீதாஜீவன், தனது இருக்கைக்கு திரும்பினார். இதைக் கண்டு மற்ற பயணிகள், அமைச்சருக்குப் பாராட்டுத் தெரிவித்தனர்