திருச்சி: திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வியாழக்கிழமை (நவ.07) நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு வருவாய் கோட்டாட்சியர் அருள் தலைமை வகித்து நடத்த வேண்டும். ஆனால், வருவாய் கோட்டாட்சியர் மதியம் 12 மணியளவில் தான் வந்துள்ளார்.
இதனால் அவர்களுக்காக காத்திருந்த விவசாயிகள் அதிருப்தியடைந்தனர். மேலும் திருச்சி வருவாய் கோட்டாட்சியர் கட்டுப்பாட்டில் உள்ள திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவெறும்பூர் ஆகிய மூன்று வட்டாட்சியர்களும் கூட்டத்துக்கு வரவில்லை.
இதையடுத்து, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கலந்து கொண்டு, திருவெறும்பூர் அருகே உள்ள சின்ன சூரியூரில் அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து போலி பட்டா மூலம் அபகரித்து உள்ளதை ரத்து செய்ய வலியுறுத்தினார்.
தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் தாமதமாக வந்ததை கண்டித்தும், வட்டாட்சியர்கள் வராததை கண்டித்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டச் சென்றார். பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸார் அவரிடம் சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர்.
» சென்னிமலை முருகன் கோயிலில் பக்தர்களின் ‘அரோகரா’ கோஷம் முழங்க சூரசம்ஹார விழா கோலாகலம்
» வலுக்கும் மஞ்சக்கொல்லை விவகாரம் முதல் காஷ்மீர் பேரவையில் கைகலப்பு வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்
பின்னர் திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகம் சென்ற அய்யாக்கண்ணு, அலுவலகத்தை கேட்டை சாத்தி போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அலுவலகத்துக்குள் யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
அப்போது அங்கு வந்த வட்டாட்சியர் செயப்பிரகாசம் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றத் தருவதாக கூறியதை அடுத்து, அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர். அதைத் தொடர்ந்து அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தது.
இதுகுறித்து அய்யாக்கண்ணு கூறியது: சின்ன சூரியூரில் 50 ஏக்கர் அரசு விவசாய தரிசு நிலம் உள்ளது. இந்த நிலத்தில் விவசாயம் செய்யவும், ஆடு, மாடுகளை மேய்க்கவும் மட்டுமே அனுமதி உள்ளது. இந்நிலையில், உறையூரைச் சேர்ந்த ராமசாமி என்பவர் 2 ஏக்கர் நிலம் வைத்திருந்தார்.
தற்போது அவரது குடும்பத்தார் அங்கு 10 ஏக்கருக்கு மேல் ஆக்கிரமித்து விவசாய தரிசு நிலத்தை வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்ய முயற்சித்து வருகின்றனர். இதற்கு வட்டாட்சியர் அனுமதி வழங்கியது தவறு. எனவே அந்த இடத்தை மீட்டு விவசாய தரிசு நிலமாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். இதுதொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தைக்காக வந்தால் வட்டாட்சியர் வரவில்லை. இதையடுத்தே நாங்கள் போராட்டம் நடத்தினோம்’ என்றார்.