வலுக்கும் மஞ்சக்கொல்லை விவகாரம் முதல் காஷ்மீர் பேரவையில் கைகலப்பு வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்

By KU BUREAU

மஞ்சக்கொல்லை சம்பவமும் வழக்குகள் பதிவும்: புவனகிரி அருகேயுள்ள மஞ்சக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து, பாமக சார்பில் சில தினங்களுக்கு முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது, அங்கிருந்த விசிக கொடிக் கம்பத்தை பெண் ஒருவர் கடப்பாரையால் அடித்து உடைத்தார். இது தொடர்பாக மஞ்சக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மருதூர் போலீஸில் புகார் அளித்தார்.

இதன்பேரில், பாமக மாவட்டச் செயலாளர் செல்வமகேஷ், கட்சியினர் சங்கர், அருள்செல்வி, அருள், கண்ணன், ஆகாஷ், பாண்டியன், முருகவேல், சிவனேசன், சூரியபிரகாஷ் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இவர்களில் அருள் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதற்கிடையே, புவனகிரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் சிலர், பாமக நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக பாமக புவனகிரி நகரச் செயலாளர் கோபிநாத் போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில், விசிக மாநில மகளிரணி துணைத் தலைவர் செல்வராணி, கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர்கள் அரங்க தமிழ் ஒளி, அறிவுடைநம்பி, நீதிவள்ளல், முன்னாள் செயலாளர் செல்லப்பன் உள்ளிட்ட 7 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, மாநில மகளிரணி துணைத் தலைவர் செல்வராணியைக் கைது செய்துள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின் மீது அன்புமணி குற்றச்சாட்டு: “கடலூர் பாமக - விசிக மோதல் பிரச்சினையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீருக்கு பதிலாக பெட்ரோல் ஊற்றி, அரசியல் செய்ய பார்க்கிறார். பாமக - விசிக இடையே சண்டையை மூட்டி விட்டு வேடிக்கை பார்ப்பதை முன்பு கருணாநிதி செய்தார். தற்போது, மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார்,” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார். மேலும், தாக்குதலுக்கு உள்ளான இளைஞர்களுக்கு ஆறுதல் கூற சென்ற பாமக நிர்வாகிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் போடப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறினார்.

“பிரச்சினையாக மடைமாற்ற பாமக முயற்சி” - திருமாவளவன்: “கொடிக்கம்ப விவகாரத்தை இரு சமூகத்தினர் இடையே நிலவும் பிரச்சினையாக மடைமாற்ற பாமகவினர் முயற்சி செய்து அவதூறு பரப்பி வருகின்றனர். பட்டியலினத்தவரும் வன்னிய சமுதாயத்தினரும் ஒற்றுமையாக அமைதியாக வாழ்ந்து வருகின்ற சூழலில் தமிழகம் முழுவதும் பதற்றத்தை உருவாக்க முயல்கின்றனர்.

இந்தப் பிரச்சினைகளுக்கு மூல காரணமாக மதுப்பழக்கம் இருப்பதால் தமிழக முழுவதும் மதுக்கடைகளை மூட வேண்டும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி வருகிறோம். இந்த உண்மைகளை பேசாமல் பட்டியலின மக்களுக்கு எதிரான வன்மத்தை தூண்டிவிடுவது அதிர்ச்சி அளிக்கிறது,” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

ரூ.1.60 கோடியில் 25 பைக் ஆம்புலன்ஸ்: அரசு உத்தரவு: எளிதில் அணுக முடியாத, போக்குவரத்து வசதியற்ற மலை கிராமப் பகுதிகளில் வாழும் பழங்குடியினர் மற்றும் இதர மக்களின் அவசர மருத்துவ சேவைகளுக்காக முதற்கட்டமாக 10 மாவட்டங்களில் 25 இரு சக்கர அவசர கால மருத்துவ வாகனங்கள் ரூ.1.60 கோடி செலவில் வாங்குவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 108 அவசர கால வாகனங்கள் உள்ள இடங்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கான இணைப்பு வாகனமாக இவ்வாகனங்கள் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழை: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக வெள்ளிக்கிழமை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

‘திமுகவை அழிக்க பலர் கிளம்பி வந்துள்ளனர்’ - “திமுகவை அழிக்க வேண்டும் என பல பேர் கிளம்பி வந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. மக்களே பதில் கூறுவார்கள். பல அணிகளாக சிதறி கிடக்கும் அதிமுகவும், யாருமே சீண்டாத பாஜகவும் திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படாதா என துண்டு போட்டு காத்திருக்கிறார்கள்,” என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இதனிடையே, மக்கள் பணியை லட்சியமாக கொண்டு இருப்பதால் மீண்டும் திமுக ஆட்சிதான் அமையும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின், கட்சித் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இபிஎஸ்-க்கு ரூ.1.10 கோடி நஷ்டஈடு வழங்க ஐகோர்ட் உத்தரவு: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேசக்கூடாது என தனபாலுக்கு தடை விதித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், பழனிசாமிக்கு ரூ.1.10 கோடியை மானநஷ்ட ஈடாக தனபால் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

கொட்டும் மழையில் சாலையில் படுத்து கிருஷ்ணசாமி ஆர்ப்பாட்டம்: அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டைக் கண்டித்து புதிய தமிழகம் கட்சி அறிவித்திருந்த பேரணிக்கு காவல் துறையினர் திடீரென அனுமதி மறுத்ததால் அக்கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போலீசாருடன் வாக்குவாதம் செய்ததுடன் கொட்டும் மழையில் சாலையில் படுத்து ஆர்ப்பாட்டம் நடத்தினார். அதனால், எழும்பூரில் பரபரப்பு ஏற்பட்டது. அனுமதியை மீறி பேரணி நடத்த முயன்றதால் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.

தேர்தல் முடிவுகளை ஏற்போம்: கமலா ஹாரிஸ்: அமெரிக்க அதிபர் தோல்வி அடைந்த ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸ் தனது எக்ஸ் பதிவில், "இந்த தேர்தல் முடிவுகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு ட்ரம்புடன் பேசினேன். அவரது வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தேன். அமைதியான முறையில் அதிகார மாற்றம் நிகழ்வதற்கு அவருக்கும் அவரது அணிக்கும் உதவுவோம் என்று கூறினேன்.

நீங்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கை, நம் நாட்டின் மீது வைத்துள்ள அன்பு, உறுதி ஆகியவற்றை எண்ணி இன்று என் இதயம் நிரம்பியுள்ளது. இந்தத் தேர்தலின் முடிவு நாம் விரும்பியதோ அல்லது நாம் போராடியதோ அல்ல. ஆனால் நான் சொல்வதைக் கேளுங்கள்: அமெரிக்காவின் வாக்குறுதியின் ஒளி எப்போதும் பிரகாசமாக எரியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் பேரவையில் கைகலப்பு: ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்குள் லாங்கேட் எம்எல்ஏ குர்ஷித் அகமது சேக், சட்டப்பிரிவு 370-ஐ திரும்பக் கொண்டு வர வேண்டும் என்று பதாகை காட்டியதால் பரபரப்பும் கைகலப்பும் ஏற்பட்டது. இவர், பாராமுல்லா மக்களவை உறுப்பினரும், சிறையில் இருக்கும் பொறியாளர் ரஷித்தின் தம்பியுமாவார். குர்ஷித் காட்டிய பதாகையில்,‘சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ-வை மீட்டெடுக்க வேண்டும், அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்’ என்று எழுதப்பட்டிருந்தது.

அதிமுக பொதுக் குழு வழக்கில் நீதிபதி விலகல்: அதிமுக பொதுக் குழுவை எதிர்த்து தொடரப்பட்ட உரிமையியல் வழக்குகளின் விசாரணையில் இருந்து விலகிக் கொள்வதாக நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் அறிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE