முகூர்த்தம், கந்தசஷ்டி காரணமாக தேனியில் பூக்களின் விலை மூன்று மடங்கு உயர்வு

By என்.கணேஷ்ராஜ்

சின்னமனூர்: முகூர்த்த நாள், கந்தசஷ்டி மற்றும் வரத்து குறைவினால் தேனி மற்றும் சீலையம்பட்டி சந்தையில் பூக்களின் விலை மூன்று மடங்கு அதிகரித்தது.

தேனி மாவட்டம் பல்லவராயன்பட்டி, கோட்டூர், பாலார்பட்டி, சீலையம்பட்டி, வேப்பம்பட்டி, புள்ளிமான்கோம்பை, தெப்பம்பட்டி, கன்னியப் பிள்ளைபட்டி, டி.ராஜகோபாலன்பட்டி, கொத்தபட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் பூ விவசாயம் அதிகளவில் நடைபெற்று வருகிறது. இங்கு விளையும் பூக்கள் ஆண்டிபட்டி, தேனி, சீலையம்பட்டி சந்தைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், கந்தசஷ்டி, முகூர்த்த நாள், பூ வரத்து குறைவு போன்ற காரணங்களால் பூக்களின் விலை 3 மடங்காக உயர்ந்துள்ளது.

தேனி மற்றும் சீலையம்பட்டி சந்தையில் மல்லிகை பூ கிலோ ரூ.1,500-க்கு விற்பனையானது. இதே போல் ஜாதிப் பூ ரூ.800, முல்லைப் பூ, கனகாம்பரம் தலா ரூ.1000, சாமந்தி, அரளி தலா ரூ.300-க்கும் விற்பனை ஆனது. மல்லிகையைப் பொறுத்தளவில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ரூ.500-க்கு விற்றது. திடீர் விலை உயர்வால் பெண்கள் பலரும் ஜாதிப் பூ, ரோஜா, பட்டன் ரோஸ் உள்ளிட்டவற்றை வாங்கி வருகின்றனர்.

வியாபாரிகள் சங்க தலைவர் கண்ணன்

இது குறித்து தேனி பூ மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் கண்ணன் கூறுகையில், "தற்போது பனி, குளிர் பருவநிலை காரணமாக, பூக்கள் அதிகளவில் பூக்கவில்லை. இதழ்கள் கருகி, அரும்புகளும் அதிகரிக்காத நிலை உள்ளது. இதனால் மூன்றில் ஒரு பங்காக பூக்கள் வரத்து குறைந்துள்ளது. இந்நிலையில், சூரசம்ஹாரம், திருக்கல்யாணம், முகூர்த்த தினம் போன்றவற்றினாலும் விலை வெகுவாய் உயர்ந்துவிட்டது. வரும் சனிக்கிழமை முதல் பூக்களின் விலை குறையத்தொடங்கும்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE