மதுரை: மதுரை ரேஸ்கோர்ஸ் சாலையில் அமைக்கப்படும் ‘ஹெல்த் வாக்’ நடை பயிற்சி பாதையில் ஏராளமான மின் கம்பங்கள், மின்சார டிரான்ஸ்ஃபார்மர்கள் உள்ளன. இவற்றை அகற்றாமலே பணிகள் நடப்பதால் மக்கள் முழுமையாக நடை பயிற்சி பாதையை பயன்படுத்த முடியாது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்றுக்கு பிறகு மக்கள் தங்கள் அன்றாட உணவு, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். அதனால், நகரின் முக்கிய சாலைகளில் நடை பயிற்சி செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், சாலைகளில் வாகனப் போக்குவரத்து அதிகரிக்கும்போது மக்கள் நடை பயிற்சி செல்ல முடியவில்லை. பூங்காக்களில் நடை பயிற்சி பாதைகள் இருந்தாலும், குறைந்தளவு மக்களே பயன்படுத்த முடிகிறது.
அதனால், கடந்த 2023 -24ம் ஆண்டு பட்ஜெட்டில், ‘நடப்போம் நலம் பெறுவோம்’ எனும் நோக்கதை அடிப்படையாக கொண்டு தமிழத்தில் 38 மாவட்டங்களில் ‘ஹெல்த் வாக்’ நடைப்பயிற்சி பாதை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில், மதுரை மாவட்டத்தில் அதிகாலையில் மக்கள் அதிகம் நடைப் பயிற்சி செல்லும் ரேஸ்கோர்ஸ் சாலையில் ‘ஹெல்த் வாக்’ நடை பயிற்சி பாதை அமைக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியம், நேரில் மதுரை வந்து அதிகாலையில் மக்களோடு மக்களாக நடைப்பயிற்சி செய்து ஆய்வு மேற்கொண்டு, ஹெல்த் வாக் நடை பயிற்சி பாதை அமைக்க, ரேஸ்கோர்ஸ் சாலையை தேர்ந்தெடுத்தார்.
» கமல்ஹாசனின் 70-வது பிறந்தநாள் - முதல்வர், தலைவர்கள் வாழ்த்து!
» திருச்சி முகாமில் உள்ள இலங்கை மீனவர்களை விடுதலை செய்யவேண்டும்: யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்
மொத்தம் 8 கி.மீ., தொலைவுக்கு இந்த சாலையில் ‘ஹெல்த் வாக்’ நடைப் பயிற்சி பாதை அமைக்கும் பணி கடந்த ஆறு மாதங்களுக்கு முன் தொடங்கியது. ஆனால், தற்போது வரை இந்த நடை பயிற்சி பாதை அமைக்கும் பணி முடிவடையாமல் பணிகள் மந்தமாக நடக்கிறது.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்,"ரேஸ்கோர்ஸ் சாலையோரம் உள்ள பழைய நடை பாதையில் வரிசையாக அடுத்தடுத்து மின் கம்பங்கள், டிரான்ஸ் ஃபார்மர்கள் உள்ளன. அதனால், ரேஸ்கோர்ஸ் சாலையில் பழைய நடை பாதையில் மக்கள் யாரும் செல்வதில்லை. அதிகாலையில் வாகனப் போக்குவரத்து இருக்காது என்பதால் சாலையில் தான் நடைபயிற்சி செல்கிறார்கள். தற்போது ‘ஹெல்த் வாக்’ நடைப்பயிற்சிப் பாதை, ஏற்கெனவே இருந்த பழைய நடைபாதையில் தான் அமைக்கப்படுகிறது.
இப்பாதையில் உள்ள மின் கம்பங்கள், டிரான்ஸ் ஃபார்மர்கள் எதுவும் தற்போது வரை அகற்றப்படாமல் பணிகள் நடக்கிறது. குறிப்பாக, மாவட்ட விளையாட்டு மைதானம் முன்பிருந்து தாமரைத்தொட்டி அழகர் கோயில் சிக்கனல் வரை உள்ள 1 கி.மீ. தொலைவிற்குள், ரேஸ்கோர்ஸ் சாலையில் இரு புறமும் 40-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள், பிஎஸ்என்எல் கம்பங்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட டிரான்ஸ் ஃபார்மர்கள் உள்ளன.
அதனால், சில இடங்களில் தற்போது அமைக்கப்படும் இந்த நடை பயிற்சி சாலை விசாலமாகவும், சில இடங்களில் ஒரு நபர் மட்டுமே நடை பயிற்சி செல்லக்கூடிய அளவிலும் மிக குறுகளாகவும் உள்ளன. அதனால், இந்த நடை பயிற்சி பாதை திட்டம் முடிந்து பயன்பாட்டிற்கு வந்தாலும் மக்கள் தொடர்ச்சியாக இந்த நடை பாதையில் நடை பயிற்சி செல்ல முடியாது. அந்த அளவுக்கு தடுக்கி விழுந்தால் மின் கம்பங்களும், மின்சார டிரான்ஸ் ஃபார்மர்களும் அதிகமாக உள்ளன. இதனால் மக்கள் மீண்டும் சாலையையே நடை பயிற்சி பாதையாக பயன்படுத்தும் நிலைதான் ஏற்படும்.
நடை பயிற்சி பாதை அமைக்கப்படும் சாலைகளில் குடிநீர் வசதி, இளைப்பாற இருக்கைகள் அமைக்கப்படும் என்றும், மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக் கிழமையில் மருத்துவ முகாமும் நடத்தப்போவதாகவும் இந்த திட்டப்பணி தொடங்கும்போது கூறப்பட்டது. ஆனால், இந்த வசதிகள் அமைக்கிற அளவிற்கு ரேஸ்கோர்ஸ் சாலையில் இடவசதியில்லை. அதனால், இந்த திட்டம் கடமைக்கு அறிவித்து செயல்படுத்தப் படுவது போல் உள்ளது" என்றனர்.
ஒப்பந்ததாரருக்கு மாநகராட்சி ‘நோட்டீஸ்’ - இது குறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "பணிகள் மந்தமாக தான் நடக்கிறது. அதனால், இந்த பணியை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரருக்கு ‘நோட்டீஸ்’ வழங்கப்பட்டுள்ளது. நடைப் பயிற்சிக்கு தொந்தரவு இல்லாமல் மின் கம்பங்கள், டிரான்ஸ் ஃபார்மர்கள் மாற்றி அமைக்கப்படும்" என்றார்.
மின் கம்பங்கள், டிரான்ஸ் ஃபார்மர்கள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் அதிகளவு உள்ளதால், அந்தக் கட்டிங்கள் முன் நடைப்பயிற்சி பாதையை முழுமையாக அமைக்க முடியவில்லை. அதனால், இந்த ரேஸ்கோர்ஸ் சாலையை ‘ஹெல்த் வாக்’ திட்டத்திற்கு தேர்வு செய்தது தவறான தேர்வு என்றும், நடைப்பயிற்சி பாதை அமைத்தாலும், மக்கள் முழுமையாக இந்த நடைப்பயிற்சி பாதையை பயன்படுத்த முடியாது என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.