காரைக்குடி: காரைக்குடியில் 106 நரிக்குறவர் குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கி 7 மாதங்களாகியும் இடத்தை அளவீடு செய்து கொடுக்காததால் எம்எல்ஏ அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகத்தை அந்தக் குடும்பங்கள் இன்று முற்றுகையிட்டனர்.
காரைக்குடி வேடன் நகரில் 20 ஆண்டுகளுக்கு மேலாக 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் வீட்டுமனை பட்டா கேட்டு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால், அவர்கள் குடியிருக்கும் பகுதி, சங்கு சமுத்திரம் கண்மாய் நீர்பிடிப்புப் பகுதி என்பதால் அங்கு இடம் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் கலைஞர் நூற்றாண்டு விழாவில் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் ஆகியோர் 106 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினர்.
மேலும், அவர்களுக்கு காரைக்குடி -திருச்சி தேசிய நெடுஞ்சாலை வ.சூரக்குடி பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் இடத்தை அளவீடு செய்து கொடுக்கவில்லை. இது குறித்து கடந்த ஜூலை மாதம் இந்து தமிழ் திசை நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து வட்டாட்சியர் ராஜா தலைமையிலான வருவாய்த் துறையினர் இடத்தை அளவீடு செய்ய நடவடிக்கை எடுத்தனர். ஆனால், அப்பகுதியில் நரிக்குறவர்களுக்கு இடம் ஒதுக்கக்கூடாது எனக் கூறி வ.சூரக்குடி பகுதி மக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இடத்தை அளவீடு செய்யாமல் வருவாய்த் துறையினர் திரும்பிச் சென்றனர். அதன் பின்னர் நரிக்குறவர்கள் பலமுறை முறைட்டும் இடத்தை அளவீடு செய்து கொடுக்கவில்லை.
இதையடுத்து அதிருப்தி அடைந்த நரிக்குறவர்கள் இன்று எம்எல்ஏ மாங்குடியின் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஆனால், அப்போது எம்எல்ஏ அங்கு இல்லை. இதனால் அங்கிருந்து புறப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். வட்டாட்சியர் ராஜா, அவர்களை சமரசப் படுத்தி நவ.22ம் தேதிக்குள் போலீஸ் பாதுகாப்புடன் இடத்தை அளவீடு செய்து கொடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
» புதுச்சேரியில் ‘ரெஸ்டோ பார்’களை அகற்ற மக்களை திரட்டி போராட்டம்: இடதுசாரிகள் கூட்டாக அறிவிப்பு