கம்பம் பள்ளத்தாக்கு: இறுதிக் கட்டத்தை எட்டிய முதல் போக அறுவடை பணிகள்

By என்.கணேஷ்ராஜ்

உத்தமபாளையம்: கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல்போக அறுவடைப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதனைத் தொடர்ந்து நிலத்தை அடுத்த போகத்துக்காக தயார் செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

முல்லை பெரியாறு அணை மூலம் தேனி மாவட்டத்தில் இருபோக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. குறிப்பாக, கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளான லோயர் கேம்ப் முதல் பழனிசெட்டிபட்டி வரை 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்கள் முல்லை பெரியாறால் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில் முதல்போக சாகுபடிக்காக கடந்த ஜூன் முதல் தேதி பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஆறு, வாய்க்கால்கள் மூலம் ஆங்கூர்பாளையம், உத்தமபாளையம், சின்னமனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் நீர் கொண்டு செல்லப்பட்டன. அப்போது நடவு செய்யப்பட்ட பயிர்கள் கடந்த மாதம் அறுவடைப் பருவத்தை எட்டின. இதனைத் தொடர்ந்து சில வாரங்களாக அறுவடைப் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 90 சதவீதத்துக்கு மேல் அறுவடை முடிந்துள்ளன.

உத்தமபாளையம் புறவழிச்சாலை, சின்னமனூர் உள்ளிட்ட தாமதமாக விதைப்பு நடைபெற்ற நிலங்களில் மட்டும் இறுதிக்கட்ட அறுவடைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒருவாரத்துக்குள் இப்பணி முழுமையாக நிறைவடையும் என்று விவசாயிகள் கூறினர்.

விவசாயி அந்தோணி

இது குறித்து உத்தமபாளையத்தைச் சேர்ந்த அந்தோணி என்ற விவசாயி கூறுகையில், "ஒரு ஏக்கருக்கு 20 மூட்டை நெல் கிடைக்கும். ஒரு மூட்டை 60 கிலோ கொண்டது. மழையால் பல இடங்களில் நெற்பயிர்கள் தலைசாய்ந்ததால் அறுவடையில் பாதிப்பு ஏற்பட்டது. தற்போது மழை இல்லாததால் இறுதிக் கட்ட அறுவடை மும்முரமாக நடைபெற்று வருகிறது. சாகுபடி முடிந்த கம்பம் பள்ளத்தாக்கு தொடக்கப் பகுதி நிலங்களில் அடுத்த போகத்துக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன" என்று விவசாயி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE