கற்காலத்தில் வரைந்த பாறை ஓவியங்கள்: கண் முன்னே கொண்டு வந்த புதுச்சேரி கல்லூரி மாணவர்கள்

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: பாறை ஓவியங்கள் குறித்து வருங்கால சந்ததியினரும் தெரிந்து கொள்ளும் வகையில், புதுச்சேரியில் நடைபெற்ற பாறை ஓவிய முகாம் மற்றும் கண்காட்சியில் மாணவ - மாணவியர் கலந்து கொண்டு முன்னோர்களின் வாழ்க்கை முறைகளை தத்துரூபமாக வரைந்தனர்.

இந்திரா காந்தி தேசிய கலை மையமும் புதுச்சேரி அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக் கூடமும் இணைந்து இரண்டு நாள் பாறை ஓவிய முகாம் மற்றும் கண்காட்சியை பல்கலை கூட வளாகத்தில் நடத்தி வருகின்றன. நுண்கலைத் துறை மாணவர்கள் சார்பில் நடைபெறும் இரண்டு நாள் ஓவிய கண்காட்சியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் கலந்து கொண்டு பாறை ஓவியங்களை வரைந்தனர்.

மேலும், இந்தக் கண்காட்சியில் முன்னோர்களின் கலை, பண்பாடு, எழுத்து, அவர்கள் வேட்டையாடிய காட்சிகள், வாழ்க்கை முறை, மனிதன் குதிரை மீது சவாரி செய்தல், மயில் பாம்புகள் சண்டை இடுதல், போன்ற பல்வேறு ஓவியங்கள் தத்ரூபமாக மாணவ மாணவியரால் வரையப்பட்டது.

இதுபற்றி பாரதியார் பல்கலைக்கூட நுண்கலை துறைத்தலைவர் பிரபாகரன் கூறுகையில், “தற்கால ஓவியத்துக்கு முன்பாக, குகை ஓவியம், பாறை ஓவியம் முன்னோர்களால் வரையப்பட்டிருந்தது. பாறை ஓவியங்களின் தத்துவங்களை அறிந்து வெளிக்கொண்டு வர இம்முகாமில் மாணவ - மாணவியர் பங்கேற்றுள்ளனர். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு படமாக பாறையில் ஓவியம் வரைந்ததை உணர்ந்து வடிவமைக்கின்றனர்.

நம் முன்னோர் பண்பாடு, கலை, தெரிந்தால் தான் தற்போதைய தற்கால கலையை இளையோர் தெளிவாக அறிய முடியும். பாறை ஓவியத்தை அக்காலத்தில் எந்த மனநிலையில் வரைந்தோர்களோ அதனைக் கருத்தில் கொண்டு தற்போது வரைந்துள்ளது அவர்களுக்கு நல்ல பயிற்சியாக அமைந்தது" என்றார்.

பயிற்சியில் ஈடுபட்டோர் கூறுகையில், “புதிதாக பாறை ஓவியம் வடிவமைப்பில் நன்கு கற்றோம். பாறை ஓவியங்களுக்கு நாங்களே வர்ணங்களை உருவாக்கியது நல்லதொரு பயிற்சியாக அமைந்தது. பாறை ஓவியம் என்பது மனித வரலாற்றின் தொடக்கத்தில் நம் முன்னோர் விட்டுச் சென்ற ஆவணங்கள். முன்னோர் தாங்கள் வாழ்ந்த இடங்களில் பாறைகளிலும், அதையடு்த்து குகைகளிலும் ஓவியங்களை வரைந்துள்ளனர்.

அண்மையில் விழுப்புரம் பகுதியிலும் பாறை ஓவியம் கண்டறியப்பட்டது. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை அறிவதற்கு இத்தகு பாறை ஓவியங்கள் பெரிதும் பயன்படுகின்றன. அக்காலத்தில் வேட்டையாடுதலே முக்கியத் தொழில். எனவே, பல்வேறு மிருகங்களைத் தாம் வேட்டையாடுவது போலவும், மிருகங்களையும் ஓவியங்களாக வரைந்திருந்தனர்" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE