புதுச்சேரியில் ‘ரெஸ்டோ பார்’களை அகற்ற மக்களை திரட்டி போராட்டம்: இடதுசாரிகள் கூட்டாக அறிவிப்பு

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரியில் ’ரெஸ்டோ பார்’களை அகற்ற மக்களை திரட்டி போராட்டம் நடத்தவுள்ளதாக இடதுசாரிகள் கூட்டாக அறிவித்துள்ளனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ராஜாங்கம், சிபிஐ(எம்எல்) பாலசுப்பிரமணியன் ஆகியோர் இன்று கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது: "புதுவையில் சிறுமிகள் மீதான கூட்டு பாலியல் வன்கொடுமை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 16 வயது சிறுமி புதுவையிலிருந்து கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதை புதுவைக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ள சம்பவமாக பார்க்கிறோம். இதை வன்மையாக கண்டிக்கிறோம். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுவை அரசின் தவறான மதுபான கொள்கை, காவல்துறையின் மெத்தனம், அரசு அதிகாரிகளின் அலட்சியம் போன்ற காரணங்களே சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் நடைபெற காரணம். நான்கு பேர் காரில் தைரியமாக சிறுமியை கடத்திச் செல்கின்றனர். இதை காவல்துறை கண்டுகொள்ளவில்லை என்றால் காவல்துறை தூங்கிக் கொண்டு இருக்கிறதா? புதுவையில் சுற்றுலாவை ஊக்குவிக்கிறோம் என்ற பெயரில் ‘ரெஸ்டோ பார்’களுக்கு அனுமதி கொடுக்கின்றனர்.

போதை கலாசாரத்துக்காக சுற்றுலாப் பயணிகள் புதுவை வருகிறார்கள் என்பதை அரசே ஊக்குவிக்கும் நிலைமை உள்ளது. ‘ரெஸ்டோ பார்’களால் பாதிக்கப்பட்ட மக்கள் இரவில் போராட்டம் நடத்தும் நிலை உள்ளது. கோயில்கள், குடியிருப்புகள் அருகில் ‘ரெஸ்டோ பார்’களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

புதுவை அரசு சுற்றுலா என்ற பெயரில் தடையற்ற மது விற்பனைக்கு அனுமதி கொடுப்பதாலும், எவ்வித கட்டுப்பாடும் இன்றி சுற்றுலாப் பயணிகள் என்ற பெயரில் குற்றச்செயல் நடப்பதை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதாலும் புதுவை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் மீது குறிப்பிட்ட கால அளவுக்குள் விசாரணை முடித்து தண்டனை வழங்க வேண்டும். கஞ்சா, போதை பொருள் விற்பனையை தடுக்க வேண்டும்.

2021க்கு பிறகு அனுமதிக்கப்பட்ட ‘ரெஸ்டோ பார்’களை ரத்து செய்ய வேண்டும். சுற்றுலாப் பயணிகளை கண்காணித்து முறைப் படுத்த வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வலுவான போராட்டத்தை முன்னெடுப்பது என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் முடிவு செய்துள்ளோம். முதற்கட்டமாக தலைமைச் செயலரைச் சந்தித்து மேற்கூறிய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்த உள்ளோம். இந்தப் பிரச்சினைகளை அரசு தீர்க்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்" என்று அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE