விசிகவினர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் முழுவதும் கடும் போராட்டம்: ராமதாஸ் எச்சரிக்கை

By KU BUREAU

வன்னியர் சங்கத் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த விசிகவினர் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழகத்தில் கடுமையான போராட்டம் நடக்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடலூர் மாவட்டம் புவனகிரியை அடுத்த மஞ்சக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லத்துரை. பாமக தொண்டரான இவரை விசிகவை சேர்ந்த சிலர் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் செல்லத்துரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரைத் தாக்கியவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழியும், பாமக மாவட்ட செயலாளர் செல்வமகேஷும் செல்லத்துரையின் குடும்பம் மற்றும் ஊர்மக்களுக்கு ஆறுதல் கூறினார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறியதைக் கூட தாங்கிக் கொள்ள முடியாத விசிகவினர், புவனகிரியில் ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் கூட்டத்தைக் கூட்டி வன்னிய மக்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசியுள்ளனர். வன்னியர் சங்கத்தின் தலைவர் பு.தா.அருள்மொழியின் தலையை வெட்டி எடுப்போம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.

கொலை மிரட்டல், வெறுப்புப் பேச்சுகளுக்காக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டிய விசிக நிர்வாகிகளை கடலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அவரது அலுவலகத்தில் வைத்து 2 மணி நேரத்துக்கும் மேலாக பேச்சு நடத்தியுள்ளார். கைது செய்யப்பட வேண்டிய குற்றவாளிகளை, ஆளுங்கட்சிக்கு வேண்டியவர்களாக இருந்தால், அலுவலகத்துக்கு அழைத்து உபசரிப்பதுதான் காவல் துறையின் கொள்கையா?

தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பவர்கள் வன்னியர்கள், ஒடுக்கப்பட்ட நிலையில் இருப்பவர்கள் பட்டியலினத்தவர்கள். தமிழக மக்கள் தொகையில் இவர்கள்தான் பெரும்பான்மையினர். இவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டால் அது தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கை மட்டுமின்றி, வளர்ச்சியையும் பாதிக்கும்.

அதனால்தான் வன்னியர்கள் மற்றும் பட்டியலினத்தவர்களிடையே அமைதியையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்காக 40 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறேன். ஆனால், இரு சமூகங்கள் ஒன்றுபட்டால் தங்களின் அரசியல் வணிகம் நடக்காது என்று அஞ்சும் சில கும்பல்கள்தான் தொடர்ந்து இத்தகைய வன்முறைகள், வெறுப்புப் பேச்சுகளை தூண்டி வருகின்றன.

இந்த தாக்குதல் விவகாரத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் உரிய நடவடிக்கைகளை காவல் துறையினர் மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் எத்தனை தடைகள் போடப்பட்டாலும், அவற்றை மீறி தமிழகம் முழுவதும் கடுமையான போராட்டங்களை பாமக முன்னெடுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE