மதுரை / திருச்சி: தெலுங்கு சமுதாயப் பெண் களுக்கு எதிராகப் பேசியதாக நடிகை கஸ்தூரி மீது மதுரை மற்றும் திருச்சியில் பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்க மாநில செயற்குழு உறுப்பினர் சன்னாசி மதுரை திருநகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், "நடிகை கஸ்தூரி ஒரு யூடியூப் சேனலில் நாயுடு சமூகத்தைப் பற்றியும், நாயுடு சமுதாயப் பெண்கள் குறித்தும் இழிவாகவும், அவதூறாகவும் பேசியுள்ளார்.
எனவே, நடிகை கஸ்தூரி மீதும், அவரது பேச்சை ஒளிபரப்பிய யூடியூப் சேனல் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எனக் கும், எனது குடும்பத்துக்கும் பாது காப்பு கொடுக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார். இந்தப் புகாரின்பேரில் நடிகை கஸ்தூரி மீது 352, 353 பிஎன்எஸ், 294 (பி) உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் காவல் ஆய்வாளர் துரைபாண்டி வழக்கு பதிவு செய்தார்.
இதேபோல, திருச்சி வயலூர் சாலை கீதா நகரைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் மாநகர குற்றப்பிரிவு போலீஸாரிடம் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில், கஸ்தூரி மற்றும் அவரது பேச்சை ஒளிபரப்பிய யூடியூப் சேனல் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். ஏற்கெனவே, நடிகை கஸ்தூரி மீது சென்னை, ஆண்டிப்பட்டியில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.