கோவை அனுப்பர்பாளையத்தில் ரூ.300 கோடி மதிப்பில் நூலகம் மற்றும் அறிவியல் மைய கட்டுமானப் பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல்நாட்டிவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வி.செந்தில்பாலாஜி, கே.என்.நேரு, எ.வ.வேலு, அன்பில் மகேஸ் முன்னிலை வகித்தனர். தலைமைச் செயலாளர் முருகானந்தம் வரவேற்றார். தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி மதுரையில் மாபெரும் நூலகம் அமைக்கப்பட்டது. அதேபோல, கோவையிலும் நூலகம் அமைக்கப்படும் என அறிவித்தேன்.
சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம், மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம்போல கோவையில் தந்தை பெரியார் பெயரில் நூலகம், அறிவியல் மையம் அமைக்கப்படும். அறிவு, ஆற்றல், பகுத்தறிவு, பகுத்துண்டு பல்லுயிர் காக்கும் தன்மை உள்ளிட்டவற்றை இளைய சமுதாயத்துக்கு கற்றுத்தந்த பெரியாரின் பெயரில் இந்த நூலகம் அமைவது பொருத்தமாக இருக்கும். 2026 ஜனவரியில் இந்நூலகம் திறக்கப்படும்.
அதேபோல, கோவை காந்திபுரத்தில் ரூ.133 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் செம்மொழிப் பூங்கா அடுத்த ஆண்டு ஜூன் மாதம் திறக்கப்படும். தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளின் கோரிக்கையை ஏற்று, கோவை குறிச்சியில் உள்ள தொழிற்பேட்டையில் ரூ.126 கோடியில் தங்க நகை தொழில் வளாகம் கட்டப்படும். என்ஏபிஎல் அங்கீகாரம் பெற்ற ஆய்வகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கொண்ட அந்த வளாகத்தில் 2 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 1,500 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
மக்களவைத் தேர்தலின்போது, ‘கோவை ரைசிங்’ என்ற பெயரில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தோம். அதன்படி பல்வேறு பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் முக்கியமானது கிரிக்கெட் ஸ்டேடியம். இதற்கான நிலம் கண்டறியப்பட்டு, பணிகள் தொடங்கியுள்ளன.
அனைத்து தரப்பினரின் பிரச்சினைகளுக்கும் தீர்வுகாணும் அரசாக திராவிட மாடல் அரசு திகழ்வதால், மக்கள் தொடர்ந்து ஆதரிக்கின்றனர். எத்தனை விமர்சனங்கள் வந்தாலும், அவற்றைப் பொருட்படுத்தாமல், மக்கள் பணியைத் தொடர்வோம். கடந்த 50 ஆண்டுகளில் வட மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழ்நாட்டின் வளர்ச்சி தெரியும். கொள்கை, லட்சியம், தொலைநோக்குப் பார்வையை அடைவதற்கான செயல்திட்டங்களால்தான் இது சாத்தியமானது.
திமுக தொடங்கும்போது வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று அண்ணா கூறினார். தெற்கை நாங்கள் வளர்த்திருக்கிறோம். தற்போது வடக்குக்கு வாரி வழங்குவது தெற்குதான். கோட்டையில் அமர்ந்து ஆட்சிபுரியாமல், களத்தில் பணியாற்ற வேண்டும் என்பதே என் குறிக்கோள். இவ்வாறு முதல்வர் பேசினார். மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நன்றி கூறினார்.
200 தொகுதிகளில் வெற்றி: கோவை போத்தனூரில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: திமுகவுக்கும், கோவைக்கும் வரலாற்று ரீதியான பிணைப்பு இருக்கிறது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் முழுமையான வெற்றியைப் பெற வேண்டும்.
எனவே, நமது சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். நமது கொள்கைகளை இளைஞர்களிடம் விதைக்க வேண்டும். ஒவ்வொரு பகுதியில் பாசறைக் கூட்டங்களை நடத்தி, 10 முதல் 15 இளைஞர்களை கொள்கை வீரர்களாக உருவாக்க வேண்டும்.
கட்சி நிர்வாகிகள் குடும்பத்துக்கும், தொழிலுக்கும் நேரம் ஒதுக்கி கவனம் செலுத்த வேண்டும். அதேநேரத்தில் தினமும் 2 மணி நேரத்தை கட்சிக்கு ஒதுக்க வேண்டும். வார இறுதியில் ஒரு நாளை முழுமையாகக் கட்சிப் பணிக்கு ஒதுக்கி, தொண்டர்களுக்கும், கட்சிக்கும் பாலமாக இருக்க வேண்டும். கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் கூட்டணி கூட்டணி கைப்பற்ற வேண்டும். 2026-ம் ஆண்டிலும் திமுகதான் ஆட்சி அமைக்கும். அதேநேரத்தில், அது சாதாரண வெற்றியாக இருக்கக் கூடாது. 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டுமென இலக்கு நிர்ணயித்துள்ளேன். எழுச்சிமிகு திமுக ஏழாவது முறையும் ஆட்சியைப் பிடிக்க உழைப்போம். இவ்வாறு முதல்வர் பேசினார்