சேவை நோக்கில் மட்டுமே செயல்படுவதால் போக்குவரத்து துறை நிதிநிலை மேம்பட வாய்ப்பில்லை: அமைச்சர் சிவசங்கர்

By KU BUREAU

அரியலூர்: மக்கள் சேவை நோக்கில் மட்டுமே செயல்படுவதால், போக்குவரத்துத் துறையின் நிதிநிலை மேம்பட வாய்ப்பில்லை என்று துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறினார்.

அரியலூரில் திமுக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கட்சியின் சட்ட திட்ட திருத்தக் குழு இணைச் செயலாளர் சுபா.சந்திரசேகர் தலைமை வகித்தார். ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் பி.பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஜெயங்கொண்டத்தை அடுத்த மகிமைபுரம் கிராமத்தில் அமையவுள்ள சிப்காட் தொழிற்பேட்டைக்கு வரும் 15-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்ட உள்ளார். தொடர்ந்து, அரியலூரில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

நடப்பாண்டு தீபாவளியையொட்டி 5.75 லட்சம் பேர் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு அரசுப் பேருந்துகளில் பயணித்துள்ளனர். கடந்த ஆண்டு 1.10 லட்சம் பேர் முன்பதிவு செய்து பயணித்திருந்த நிலையில், நடப்பாண்டு 1.52 லட்சமாக அதிகரித்துள்ளது.

தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றவர்களில் கடந்த 3-ம் தேதி மட்டும் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்து திரும்பியுள்ளனர். இது தமிழகப் போக்குவரத்து துறை வரலாற்றில் இதுவரை இல்லாத எண்ணிக்கையாகும்.

போக்குவரத்துத் துறை பொதுமக்களுக்கான சேவை துறையாக செயல்பட்டு வருகிறது. இதில் லாப நோக்கம் ஏதுமில்லை. டீசல் விலை கடுமையாக உயர்ந்து, மற்ற மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்ந்த நிலையிலும், தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை. சேவை நோக்கில் மட்டுமே செயல்படுவதால், போக்குவரத்துத் துறை நிதிநிலை மேம்பட வாய்ப்பில்லை. இவ்வாறு அமைச்சர் கூறினார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE