நாகர்கோவில்: கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறை இடையேயான கண்ணாடி இழை கூண்டு பாலப் பணி 70 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு தலைவர் காந்தி ராஜன் கூறியுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டுக் குழுவினர் அதன் தலைவர் காந்தி ராஜன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அழகு மீனா, தமிழ்நாடு சட்டமன்ற பேரவைச் செயலாளர் சீனிவாசன், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், சட்ட பேரவை மதிப்பீட்டு குழு உறுப்பினர்கள் சேவூர் இராமச்சந்திரன், பாலாஜி, ராஜா, வெங்கடேஷ்வரன் ஆகியோர் முன்னிலையில் குமரி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்து இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காந்திராஜன் கூறியதாவது: "கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, கூட்டுறவுத் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, சிறைச் சாலைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, இந்து சமய அறநிலையத் துறை, வனத்துறை, இயற்கை வளங்கள் துறை உள்ளிட்ட துறைகளின் செயல்பாடுகள் குறித்து துறை அலுவலர்களுடன் கேட்டறியப்பட்டதுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கன்னியாகுமரி கடல் நடுவே அய்யன் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறையை இணைக்கும் கடல்சார் கண்ணாடி இழை கூண்டு பாலம் ரூ.37 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது. முதலில் திருவள்ளுவர் சிலை பக்கத்தில் அடித்தள கம்பிகள் பொருத்தப்பட்டு திருவள்ளுவர் சிலை பக்கத்திலும் விவேகானந்தர் பாறை நினைவகத்தின் பக்கத்திலும் தூண்கள் கான்கிரீட் போடும் பணி நிறைவடைந்துள்ளது.
ஆராய்ச்சி வடிவமைப்புகள் மற்றும் தர நிலைகள் அமைப்பின் அங்கீகரிக்கப்பட்ட வளைவு உத்திரங்கள், குறுக்கு உத்திரங்கள், நீளவாக்கு உத்திரங்கள் மற்றும் குறுக்கு உத்திரங்கள் ஆகியவற்றின் மாதிரி கட்டமைத்தல் பணிகள் நிறைவு பெற்று முழுமையாக பொருத்தப்பட்டு சரி பார்க்கப்பட்டது. முழுமையாக பொருத்தப்பட்ட எஃகு அலகுகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு, வர்ணம் பூசப்பட்டு புதுச்சேரியில் இருந்து கடந்த ஆகஸ்டு 5ம் தேதி கன்னியாகுமரி கொண்டு வரப்பட்டது.
தற்பொழுது இரு பக்கங்களிலும் தாங்கு தூண்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்து வளைவு உத்திரங்கள், குறுக்கு உத்திரங்கள், நீள வாக்கு உத்திரங்கள் மற்றும் குறுக்கு உத்திரங்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. உத்திரங்கள் பொருத்தும் பணி நிறைவடைந்த உடன் பாலத்திற்கான நடைப்பாதை மற்றும் ஒளிரூட்டும் விளக்குகள் அமைக்கும் பணிகள் நடைபெறும். தற்போது
வரை 70 சதவீத பணிகள் முடிவடைந்து உள்ளன. இந்த பாலப் பணி ஜனவரி மாதத்திற்குள் நிறைவடையும்.
புத்தளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் நான்கு முழு நேர நியாய விலைக்கடைகளும், ஒரு பகுதி நேர நியாய விலைக்கடையும் செயல்பட்டு வருகிறது. புத்தளம் 1 நியாய விலைக்கடையில் 685 குடும்ப அட்டைகள் இணைக்கப் பட்டுள்ளன. குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி, கோதுமை மற்றும் குறைந்த விலையில் சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் போன்ற பொருட்கள் இந்நியாய விலைக்கடை மூலம் விநியோகம் செய்யப்படுகிறது.
மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு நிறுவனங்களால் தயாரிக்கப்படும் கூட்டுறவு தயாரிப்புகள் குறைந்த தரமான விலையில் இந்த நியாய விலைக்கடை மூலம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், கூட்டுறவு துறை சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் சார்பில் புத்தளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு கடனுதவிகள் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் புத்தளம், மேக்காமண்டபம், பரைக்கோடு, குருந்தன்கோடு, அருமநல்லூர், தேரூர், வீரவநல்லூர், ஆற்றூர், வெண்டலிகோடு, பாகோடு ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் வாயிலாக 945 பயனாளிகளுக்கு ரூ.5.13 கோடி மதிப்பில் பயிர் காப்பீட்டு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. அருமநல்லூர், ஆற்றூர், குருமத்தூர், வெண்டலிகோடு ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் வாயிலாக 225 பயனாளிகளுக்கு ரூ.45 லட்சம் மதிப்பில் விவசாய நகை கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
குருமத்தூர், வெண்டலிகோடு, அருமநல்லூர், தேரூர், வீரவநல்லூர் ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் வாயிலாக 30 பயனாளிகளுக்கு ரூ.23 லட்சம் மதிப்பில் கால்நடை பாரமரிப்பு கடனுதவிகளும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. நாகர்கோவில் நாகராஜா கோயிலில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டதுடன் நாகர்கோவில் வடசேரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தனியார் பேருந்து நிலையத்தின் செயல்பாடுகள் குறித்தும் துறை அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது" என்று காந்திராஜன் கூறினார்.
இந்த ஆய்வுகளின் போது மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், மாவட்ட வன அலுவலர் பிராசாந்த், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையாளர் நிஷாந்த் கிருஷ்ணா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் காளீஸ்வரி, கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குநர் ராதாகிருஷ்ணன், மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.