செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்லாவரம், செங்கல்பட்டு, திருப்போரூர், மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் ஆகிய இடங்களில் பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வன்னியர் சங்க தலைவர் இளங்கோவன் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதைக் கண்டித்து செங்கல்பட்டு மத்திய மாவட்ட பாமக சார்பில் இன்று திருப்போரூர் பேருந்து நிலையத்தில் பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் காயார் ஏழுமலை தலைமையில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து பேருந்து நிலையத்தில் இருந்து காவல் நிலையம் வரை ஊர்வலமாக வந்த அவர்கள் காவல் ஆய்வாளர் சரவணனிடம் மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர். இதேபோல் செங்கல்பட்டு மாநில துணை பொது செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர். பல்லாவரத்தில் செங்கற்பட்டு மேற்கு மாவட்ட பாமக செயலாளர் வெங்கடேசன் தலைமையில் பல்லாவரம் வட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதேபோல் திருக்கழுக்குன்றம், மாமல்லபுரத்திலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.