மதுரை: தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கத்தில் மதுரை அரசு போக்குவரத்து கழகம் ஒரே நாளில் ரூ.3.80 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. 4 நாள் தீபாவளி விடுமுறையின் போது மொத்தம் 61.95 பேர் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர்.
தீபாவளி விடுமுறையின் போது மதுரை அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் மதுரையிலிருந்து சென்னை உட்பட பல்வேறு முக்கிய நகரங்களுக்கு வழக்கமான பேருந்துகளுடன் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டன. தீபாவளி விடுமுறையின் போது அரசுப் பேருந்துகளில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மண்டலங்களை உள்ளடங்கிய மதுரை அரசு போக்குவரத்துக் கழக கோட்டத்தில் தீபாவளி சிறப்பு பேருந்து இயக்கத்தால் நவ.4-ல் மட்டும் ரூ.3 கோடியே 80 லட்சத்துக்கு 19 ஆயிரம் வருவாய் கிடைத்துள்ளது.
இது கடந்தாண்டுகளை விட அதிகமாகும். மண்டல அளவில் மதுரை, விருதுநகர் மண்டலங்களை விட திண்டுக்கல், தேனி மாவட்டங்கள் உள்ளடங்கிய திண்டுக்கல் மண்டலம் ரூ.1 கோடியே 61 லட்சத்துக்கு 60 ஆயிரம் வருவாய் ஈட்டியுள்ளது. இந்த நான்கு நாட்களில் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 61.95 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.
இது தொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக மதுரை கோட்ட மேலாண் இயக்குநர் சிங்காரவேலு கூறுகையில்,"தீபாவளி விடுமுறையின் போது சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. பயணிகள் எந்தவொரு சிரமம் இல்லாமல் பயணம் செய்ய ஏதுவாக பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்பட்டன.
» புதுச்சேரி: தமிழக அரசை கண்டித்து பாமகவினர் சாலையில் படுத்து மறியல்
» கும்பகோணம் - வேப்பத்தூர் கால்நடை மருத்துவமனை இடமாற்றம்: விவசாயிகள் ஆடு, மாடுகளுடன் சாலை மறியல்
மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட 3 மண்டலங்களில் வருவாய் உயர்வுக்காக இரவு, பகல் பாராமல் முனைப்புடன் செயல்பட்ட ஓட்டுநர்கள், நடத்துநர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், பேருந்து நிலைய பொறுப்பாளர்கள், பயணச்சீட்டு ஆய்வாளர்கள், அலுவலக மேற்பார்வையாளர்கள், தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள், கிளை மேலாளர்கள், அலுவலர்கள், தொழிற்சங்க பொறுப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறோம்.
இனிவரும் நாட்கள் மற்றும் விழாக்காலங்களில் அனைத்துப் பணியாளர்களும் ஒன்றிணைந்து முனைப்புடன் பணியாற்றி, பயணிகளுக்கு நன்கு சேவை செய்து போக்குவரத்து கழகத்தின் வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.