கன்னியாகுமரியில் சிப்பி மீன் சீசன் துவக்கம்: போதிய விலையின்றி மீனவர்கள் ஏமாற்றம்

By எல்.மோகன்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் சிப்பி மீன் சீசன் துவங்கியுள்ள நிலையில் போதிய விலை கிடைக்காததால் மீனவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையுள்ள 46 மீனவ கிராமங்களில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இவற்றில் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம், சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகங்களில் இருந்து 2,500-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும், ஆயிரக்கணக்கான ஃபைபர் படகுகளும் மீன்பிடி பணியில் ஈடுபட்டுள்ளன. இந்தப் படகுகளில் கணவாய், இறால், நெய் மீன், கேரை, சுறா, சூரை மற்றும் நெத்திலி, சாளை, வெளமீன் போன்ற மீன்கள் பிடிபடுகின்றன.

இது தவிர ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் தோடு எனப்படும் 'சிப்பி' மீன்கள் அதிகமாக பிடிபடுவது வழக்கம். முத்துக் குளிக்கும் மீனவர்களும், மூச்சுப் பயிற்சி பெற்ற மீனவர்களும் கடல் பாறை பகுதிகளில் நீருக்கு அடியில் சென்று பாறையில் ஒட்டியிருக்கும் சிப்பி மீன்களை எடுத்து கரைசேர்ப்பர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல், கோடிமுனை, கடியபட்டணம், வாணியக்குடி, குறும்பனை, இனயம், மேல்மிடாலம் ஆகிய மீனவ கிராமங்களில் மீனவர்கள் சிப்பி மீன் எடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். சிப்பி மீன்களுக்கு கேரளாவில் உள்ள ஓட்டல் மற்றும் மதுபான பார்களில் அதிக தேவை உள்ளது. இதனால் கேரள வியாபாரிகள் சிப்பி மீன்களை போட்டி போட்டு வாங்கிச் செல்வர். நவம்பர் மாதம் துவங்கி உள்ள நிலையில் குமரி மாவட்டத்தில் சிப்பி மீன் சீசன் துவங்கி உள்ளது.

குளச்சலில் மீனவர்கள் கடந்த இரண்டு நாட்களாக சிப்பி மீன் எடுத்து வருகின்றனர். சிப்பி மீன்களை மீனவர்கள் ஏலக் கூடத்தில் கொண்டு வந்து ஏலம் போட்டு விற்பனை செய்கின்றனர். ஆயிரத்திற்கு மேல் எண்ணம் கொண்ட ஒரு பெட்டி சிப்பி மீன் காலையில் 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது. பின்னர் அது விலை இறங்கி ரூ.3 ஆயிரத்துக்கு விலை போனது. போதிய விலை கிடைக்காததால் சிப்பி மீன் எடுக்கும் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

ஒக்கி புயல் பாதிப்பிற்கு பின்னர் சிப்பி மீன் குறைவாக கிடைப்பதால் மீனவர்கள் கவலையடைந்துள்ளனர். இந்த வருடமும் சிப்பி மீன் சீசன் மீனவர்களுக்கு கை கொடுக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. உரிய விலை கிடைக்காததால் சிப்பி மீன் எடுப்பதில் மீனவர்கள் ஆர்வமின்றி இருந்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE