புதுச்சேரி: தமிழக அரசை கண்டித்து பாமகவினர் சாலையில் படுத்து மறியல்

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: வன்னியர் சங்கத் தலைவரை தரக்குறைவாக பேசியோரை கைது செய்யக்கோரி புதுச்சேரியில் தமிழக அரசை கண்டித்து பாமகவினர் சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டனர்.

தமிழக போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக பேருந்துகளை புதுச்சேரியில் நுழைய அனுமதிக்கமாட்டோம் என பாமக மாநிலத்தலைவர் கணபதி தெரிவித்தார். இவரது தலைமையில் ஏஎஃப்டி அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் பங்கேற்றனர்.

இதில் சம்பந்தப்பட்ட விசிகவினர் மீது குற்றம் சாட்டியும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர். அப்போது திடீரென்று மறைமலை அடிகள் சாலையில் பாமகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தமிழக பேருந்துகளை மறித்து இயக்க விடமாட்டோம் எனக்கூறி சாலையில் அமர்ந்து கோஷம் எழுப்பினர். போலீஸார் சாலை மறியலில் ஈடுபட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டனர். அதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.

போலீஸார் அவர்களை அங்கிருந்து அகற்ற முற்பட்ட போது வாக்குவாதம் முற்றி பலர் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து போலீஸார் அவர்களை கைது செய்தனர். அப்போது பாமக மாநிலச்செயலர் கணபதி செய்தியாளர்களிடம் கூறுகையில், “வன்னியர் சங்கத்தலைவரை தரக்குறைவாக பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை தமிழக அரசு கைது செய்யவேண்டும். முதல் கட்டமாக ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இரண்டு நாட்களில் வழக்குப்பதிவு செய்து குண்டர் சட்டத்தில் அவர்களைக் கைது செய்யாவிட்டால் தமிழக அரசு பேருந்துகளை புதுச்சேரிக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE