கும்பகோணம் - வேப்பத்தூர் கால்நடை மருத்துவமனை இடமாற்றம்: விவசாயிகள் ஆடு, மாடுகளுடன் சாலை மறியல்

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: திருவிடைமருதூர் வட்டம், வேப்பத்தூரில் இயங்கி வந்த கால்நடை மருத்துவமனை முன்னறிவிப்பின்றி இடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து, விவசாயிகள் கால்நடைகளுடன் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேப்பத்தூர் பிரதானச் சாலையில் கடந்த 25 ஆண்டுகளாக கால்நடை மருத்துவமனை இயங்கி வந்தது. வேப்பத்தூர், கல்யாணபுரம், பாகவதபுரம், திருக்கழித்தட்டை உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இந்த மருத்துவமனையை, திருவிசை நல்லூருக்கு இடமாற்றம் செய்வதாக அறிவித்தனர். ஆனால், வேப்பத்தூர் பேரூராட்சி நிர்வாகம் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று இரவு திடீரென முன்னறிவிப்பின்றி கால்நடை மருத்துவமனையை திருவிசை நல்லூருக்கு மாற்றினர். இதனையறிந்த வேப்பத்தூர் பேரூராட்சித் தலைவர் முருகானந்தம் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் 50-க்கும் மேற்பட்ட மாடு, ஆடு, கோழிகளுடன், கல்லணை - பூம்புகார் சாலையில் பாகவதபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையறிந்த திருவிடைமருதூர் வட்டாட்சியர் பாக்யராஜ், டிஎஸ்பி ராஜூ மற்றும் போலீஸார் அந்த இடத்திற்குச் சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், இங்கு இயங்கி வந்த கால்நடை மருத்துவமனை மீண்டும் இதே இடத்தில் செயல்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து விவசாயிகள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அந்தச் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE