திருப்பூர்: வனவிலங்குகளால் பாதிக்கப்படும் விவசாயிகளை தமிழக அரசு வஞ்சிப்பதாக, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் குற்றம்சாட்டி உள்ளது.
இது தொடர்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி இன்று திருப்பூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "வனவிலங்குகளால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களுக்கு மத்திய பிரதேச அரசு ரூ.25 லட்சமும், கர்நாடக அரசு ரூ.15 லட்சமும் வழங்கி வரும்போது, தமிழக அரசு 5 லட்சம் மட்டுமே வழங்கி விவசாயிகளை வஞ்சிக்கிறது. கள்ளச்சாராயம் குடித்து இறப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் கொடுக்கும் தமிழக அரசு, 130 கோடி மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகள் யானை, காட்டுப் பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளால் தாக்கப்பட்டு இறக்க நேரிடும்போது, ரூ.5 லட்சம் மட்டுமே வழங்கி விவசாயிகளை வஞ்சிக்கிறது.
காட்டுப் பன்றிகளும், மயில்களும் தமிழகம் முழுவதும் அனைத்து விவசாய நிலங்களிலும், ஏரிகளிலும், குளங்களிலும் நிறைந்துள்ளன. விவசாயிகளின் ஒட்டுமொத்த மகசூலில் 23 சதவீதத்தை மயிலும், காட்டுப் பன்றியுமே சேதப்படுத்துவதாக அரசின் அறிக்கை கூறுகிறது. கேரளாவில் சமீபத்தில் காட்டுப்பன்றியை ஊராட்சி மன்ற தலைவர்களே சுட்டுக்கொல்வதற்கு, அதிகாரம் வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.
இதனால் காட்டுப்பன்றிகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் சேதங்கள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இது குறித்து தமிழக அரசால் குழு அமைக்கப்பட்டு, அக்குழு கேரளாவுக்கு ஆய்வுக்குச் சென்று வந்த பின்பும், வனத்துறை அமைச்சர் காட்டுப் பன்றியைச் சுட்டுக்கொல்வதற்கு அனுமதி வழங்கப்படும் என அறிவித்து 6 மாதங்கள் ஆகியும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
» மண்டபம் - ராமேசுவரம் ரயில் பாதையில் 90 கி.மீ. வேகத்தில் இன்று ரயிலை இயக்கி சோதனை
» டெல்லியில் நவம்பர் 13ம் தேதி தர்ணா: ஓய்வூதியர் சங்கங்களின் தேசிய ஒருங்கிணைப்புக் குழு அறிவிப்பு
காட்டுப் பன்றியை வேட்டையாடுவதற்கு கேரளா அனுமதி கொடுத்துள்ளபோது, அங்குள்ள நிலைமையைக் காட்டிலும் பல மடங்கு எண்ணிக்கையில் தமிழ்நாட்டில் காட்டுப் பன்றிகள் அதிகமாக உள்ள நிலையில் அவற்றை சுட்டுக்கொல்ல அனுமதி கொடுக்காமல், விவசாயிகளை பழி வாங்கி வரும் தமிழக அரசுக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கடும் கண்டனம் தெரிவிக்கிறது. மேலும், வன விலங்குகளால் பயிர்களுக்கும், மகசூலுக்கும் ஏற்படும் சேதங்களுக்கு சொற்ப அளவிலேயே இழப்பீடும் வழங்கப்படுகிறது.
யானைகள் தென்னை மரத்தை அழிக்கும்போது ரூ. 500 மட்டுமே வழங்கப்படுகிறது. வனவிலங்குகளால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களுக்கு இழப்பீடாக ரூ. 25 லட்சமும், காட்டுப்பன்றியை உடனடியாக வேட்டையாடுவதற்கு அனுமதியும் வழங்குவது மட்டுமே இதற்கெல்லாம் தீர்வாகும்" என்று ஈசன் முருகசாமி கூறினார்.