குன்னூரில் தொடரும் மழை: நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

By ஆர்.டி.சிவசங்கர்

குன்னூர்: குன்னூரில் நிலச் சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் யானை பள்ளம் கிராமத்துக்கு செல்லும் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டது. மேலும், சாலையின் ஒரு பகுதி பிளவு ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பழங்குடியின கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சிரமம் அடைந்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலமாக, விழுந்த மண் மற்றும் பாறைகளை அகற்றி சீர் செய்தனர்.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா பழங்குடியின கிராமமான நிலச்சரிவு ஏற்பட்ட யானை பள்ளம் கிராமத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார். இதேபோன்று குன்னூர் பெட்போர்டு பகுதியில் மிகவும் உயரமாக கட்டப்பட்ட தடுப்புச் சுவர் இடிந்து சாலையில் விழுந்து மூன்று நாட்கள் அகற்றப்படாமல் இருந்தது. அதையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,"மூன்று நாட்களாக சாலையில் விழுந்த மண் மற்றும் கற்களை அகற்றாமல் உள்ளதால் வாகனங்கள் செல்லவும், குடியிருப்பு வாசிகள் நடந்து செல்லவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இங்கு ஒரு பகுதி அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதால் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலை உள்ளது. எனவே உடனடியாக இதனை சம்பந்தப்பட்ட உரிமையாளர் சீரமைக்க வேண்டும்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE