சேலம்: தெலுங்கு பேசும் மக்களை அவதூறாகப் பேசிய நடிகை கஸ்தூரியை உடனடியாக கைது செய்ய வேண்டும், என்று தேசிய தெலுங்கர் சிறுபான்மை சமூக கூட்டமைப்பு மாநிலத் தலைவர் அரவிந்தன் தெரிவித்தார்.
இதுகுறித்து சேலத்தில் அவர் கூறியதாவது, “சென்னையில் நடைபெற்ற பிராமணர்கள் கூட்டத்தில் பேசிய திரைப்பட நடிகை கஸ்தூரி, தெலுங்கு பேசும் மக்களை அவதூறாக, மனம் புண்படும்படி பேசியுள்ளார். அவருடைய பேச்சுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறோம்.
நடிகை கஸ்தூரி செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது, நான் தெலுங்கர்களைப் பற்றி பேசவில்லை. ஒரு குடும்பத்தை பற்றி தான் பேசுகிறேன் என்றார். அவர்களும் தெலுங்கு சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் தான். மேலும், தமிழக அரசையும் கஸ்தூரி விமர்சித்துள்ளார். எனவே, அவரை கைது செய்ய வேண்டும் என தேசிய தெலுங்கு சிறுபான்மை சமூக கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். நடிகை கஸ்தூரி பொது மன்னிப்பு கேட்க வேண்டும்.
ஆந்திரா, தெலங்கானா அனைத்து இடங்களிலும் தெலுங்கு பேசக்கூடிய மக்கள் ஒன்றிணைந்து, மிக விரைவில் சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். நடிகை கஸ்தூரி ஹைதராபாத்தில் குடியிருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் அங்கு நடிப்பதற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என ஆந்திர அரசையும் கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.
» ரந்தம்பூர் தேசிய பூங்காவில் 25 புலிகளை காணவில்லை: ராஜஸ்தானில் அதிர்ச்சி
» கடலூர்: நள்ளிரவில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸாருக்கு கத்திக்குத்து