ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே கண்மாய்பட்டியில் உள்ள தரைப்பாலம் மழைக்காலத்தில் வெள்ளநீரால் மூழ்கடிக்கப்படுவதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு 10 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் தரைப்பாலத்தை அகற்றிவிட்டு உயர்மட்ட பாலம் அமைக்க கோரி ஊராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் இன்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியில் இருந்து நத்தம்பட்டி செல்லும் சாலையில் கண்மாய்பட்டி பெரியகுளம் கண்மாய் கால்வாயில் 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தரைப்பாலம் உள்ளது. இவ்வழியாக நத்தம்பட்டி, அம்மன்கோவில்பட்டி, வரகுணராமபுரம், சேர்வராயன்பட்டி, கோபாலபுரம் உட்பட 10 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தரைப்பாலம் மூழ்கடிக்கப்படுவதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, இந்த 10 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் 8 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்லும் நிலை ஏற்படுகிறது. இதனால் கண்மாய்பட்டி தரைப்பாலத்தை அகற்றிவிட்டு, உயர் மட்ட பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த ஆண்டு பருவ மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில், உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படாததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில் கண்மாய்பட்டியில் உயர்மட்ட பாலம் அமைக்க வலியுறுத்தி மேல ராஜ குலராமன் ஊராட்சி அலுவலகம் முன்பாக பொதுமக்கள் இன்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
"ஆண்டுதோறும் பருவமழை காலத்தில் தரைப்பாலத்தை வெள்ளம் மூழ்கடித்து போக்குவரத்து துண்டிக்கப்படுவது தொடர் கதையாக உள்ளதால் விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள், பள்ளி மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். உயர்மட்ட பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும்" என போராட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் கூறினர்.