பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலம் அளவிட எதிர்ப்பு: அதிகாரிகளுடன் மக்கள் வாக்குவாதம்

By KU BUREAU

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் அமையவுள்ள புதிய விமான நிலையத்துக்காக நெல்வாய் கிராமத்தில் நிலம் அளவிடும் பணிக்காக அதிகாரிகள் வந்தபோது அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூர், நெல்வாய், நாகப்பட்டு, இடையர்பாக்கம், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.

இதற்கான அறிவிப்புகளை மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டுள்ளன. இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டத்துக்கு அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள் முதல் 834 நாட்களாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில் பரந்தூர் விமான நிலையம் அமைய உள்ள பகுதிகளில் நீர்வளத் துறை அதிகாரிகள் ஆழ்துளைக் கிணறுகளை கணக்கெடுக்கும் பணியில் கடந்த வாரம்ஈடுபட்டனர். தற்போது நிலம் அளவிடும்பணியை பொதுப்பணித் துறை தொடங்கியதை தொடர்ந்து நெல்வாய் ஊராட்சியில் வீடுகளை அளவிடும் பணிக்காக வருவாய் துறையினர் வந்தனர்.

அப்போது வருவாய் துறையினரை அந்தப் பகுதி மக்கள் தடுத்து வாக்குவாதம் செய்தனர். பின்னர் அவர்களுடன் வந்த போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தினர். மக்களின் உணர்வுகளை மதிக்காமல் விமான நிலையம் அமைக்கும்முயற்சியில் அரசு தீவிரம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE