அவதூறு வழக்கில் விடுவிக்க கோரும் பழனிசாமி மனுவை ஏற்க கூடாது: தயாநிதி மாறன் பதில் மனு தாக்கல்

By KU BUREAU

சென்னை: அவதூறு வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி முன்னாள் முதல்வர் பழனிசாமி தாக்கல் செய்துள்ள மனுவை ஏற்கக்கூடாது என தயாநிதிமாறன் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் நேரத்தில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமி பேசும்போது, "மத்திய சென்னை திமுக எம்.பி. தயாநிதி மாறன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை" என குற்றம் சாட்டியிருந்தார்.அதையடுத்து பழனிசாமி்க்கு எதிராக தயாநிதி மாறன் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி பழனிசாமி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விடுவிப்பு மனுவை ஏற்கக்கூடாது எனக்கூறி தயாநிதிமாறன் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள விடுவிப்பு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. புதிய குற்றவியல் சட்டமான பாரதிய நகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா அமலுக்கு வரும் முன்பாகவே இந்த அவதூறு வழக்கு தொடரப்பட்டது என்பதால் பழைய குற்றவியல் விசாரணை முறை சட்டத்தின்கீழ் தான் இந்த வழக்கை விசாரிக்க முடியும்.

எனவே இந்த அவதூறு வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி புதிய சட்டத்தின் கீழ் பழனிசாமி தாக்கல் செய்துள்ள இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் குற்றச்சாட்டுகள் குற்றம் சாட்டப்பட்டவருக்கு வாசித்து காட்டப்பட்டு விட்டதால் வழக்கில் இருந்து விடுவிக்க கோர முடியாது எனக் கோரியிருந்தார்.

அதையடுத்து இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல், பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான வாதத்துக்காக விசாரணையை வரும் டிச.2-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE