தமிழக கடற்கரை பகுதிகளில் ஆமைகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை: நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு

By KU BUREAU

சென்னை: தமிழக கடற்கரை பகுதிகளில் கடல் ஆமைகளை பாதுகாக்க, ஆமை பாதுகாவலர்கள், தன்னார்வலர்களை ஈடுபடுத்த அனுமதியளித்தும், நிதி ஒதுக்கியும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வனத்துறை செயலர் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள கடல் ஆமைகளை பாதுகாக்க ஆண்டுக்கு ரூ.1 கோடி செலவில் ஆமை பாதுகாவலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என கடந்த ஜூன் 26-ம் தேதி வனத்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இதையடுத்து, கடந்த ஜூலை 10-ம் தேதி முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் வனத்துறை தலைவர் அரசுக்கு எழுதிய கடிதத்தில், தமிழகத்தில் ஆமை பாதுகாவலர்கள் மூலம் கடல் ஆமைகளை பாதுகாக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இக்கடிதத்தை கவனமாக பரிசீலித்த தமிழக அரசு, ஆமை பாதுகாவலர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த ரூ.25 லட்சம் மற்றும் ஆமை பாதுகாப்பு தொடர்பான பயிலரங்கத்துக்கு ரூ.10 லட்சம் என ரூ.35 லட்சம் ஒதுக்கியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழக கடற்கரைப் பகுதிகளை பொறுத்தவரை, ஆண்டுதோறும் ஆலிவ் ரிட்லி (சிற்றாமைகள்) மற்றும் பச்சை ஆமைகள் வருகின்றன. இந்த ஆமைகளை பாதுகாக்கும் வகையில் உள்ளூர் மீனவ தன்னார்வலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களை உள்ளடக்கிய ஆமை பாதுகாவலர் குழுக்கள் அமைக்கப்படுகின்றன. இக்குழுவினர் ஆமைகள் முட்டையிடும் பகுதிகளை பாதுகாத்தல், ஆமை குஞ்சுகளை மீண்டும் கடலுக்குள் பாதுகாப்பாக அனுப்ப உதவும் பணிகளிலும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE