மதுரை: விதிகளை மீறி செயல்படும் மனமகிழ் மன்றங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மானகிரி வழக்கறிஞர் செல்வகுமார், உயர் நீதிமன்ற அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவதை இலக்காகக் கொண்டுள்ளது. ஆனால், தனியார் மதுக் கடைகளுக்கு மனமகிழ் மன்றங்கள் எனும் பெயரில் அனுமதி வழங்கப்படுகிறது.
இவ்வாறு பதிவு செய்த மனமகிழ் மன்றங்களில், சங்கத்தில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு மட்டுமே மது விற்க முடியும். ஆனால், தமிழகத்தில் எப்எல்-2 உரிமம் பெற்ற மனமகிழ் மன்றங்கள் சட்ட விரோதமாக உறுப்பினர் அல்லாதவர்களுக்கும் மதுவை அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றன. இவ்வாறு விதிகளை மீறும் மனமகிழ் மன்றங்களின் பதிவுகளை பதிவுத் துறை ரத்து செய்யலாம். ஆனால், மனமகிழ் மன்றங்கள் விதிமுறைகளை மீறி செயல்பட்டாலும், அரசியல் பின்புலம் கொண்டவர்களின் தலையீட்டால் உரிமங்கள் ரத்து செய்யப்படுவதில்லை.
இவை தொடர்பாக நடவடிக்கை கோரி பதிவுத் துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, தமிழகத்தின் அனைத்து மனமகிழ் மன்றங்களிலும் ஆய்வு மேற்கொண்டு, விதிகளை மீறி செயல்பட்டு வரும் மனமகிழ் மன்றங்களின் உரிமத்தை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் வலியுறுத்தியிருந்தார்.
» அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றிபெற வேண்டி துளசேந்திரபுரம் கோயிலில் சிறப்பு வழிபாடு
» குரோம்பேட்டையில் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரியகிளட் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு பிளீடர் திலக்குமார் ஆஜராகி, "மனமகிழ் மன்றங்களில் மாதத்துக்கு இரு முறை, வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளால் முறையாக ஆய்வு செய்யப்படுகிறது" என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், "மனமகிழ் மன்றங்கள் விதிகளின்படி இயங்குவதை உறுதி செய்வது அரசின் கடமை. விதிகளை மீறி செயல்படும் மனமகிழ் மன்றங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, அனைத்து மனமகிழ் மன்றங்களும் விதிப்படி செயல்படுகிறதா என்பதை பதிவுத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். அது தொடர்பாக தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை, பதிவுத் துறைச் செயலர் மற்றும் பத்திரப் பதிவுத் துறை தலைவர் ஆகியோர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டு, விசாரணையை டிச. 10-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்