“விஜய் வருகையால் நாதக கூடாரம் காலியாகிவிடும் கவலையில் சீமான்...” - மாணிக்கம் தாகூர் எம்.பி

By அ.கோபால கிருஷ்ணன்

சிவகாசி: நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் தனது கூடாரம் காலியாகிவிடும் என்ற கவலையில் சீமான் பேசுவதகாக சிவகாசியில் மாணிக்கம் தாகூர் எம்.பி கூறியுள்ளார்.

சிவகாசியில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட சுகாதார வளாகம், குளியல் தொட்டி, தண்ணீர் தொட்டி ஆகியவற்றை மாணிக்கம் தாகூர் எம்.பி இன்று திறந்து வைத்தார். சிவகாசி மேயர் சங்கீதா, எம்எல்ஏ அசோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது மாணிக்கம் தாகூர் அளித்த பேட்டி: "தமிழகம் அனைவரின் மொழியையும், நம்பிக்கையையும் போற்றுகின்ற மண்ணாக உள்ளது. பாஜக, ஆர்எஸ்எஸ் ஆதரவாளரான நடிகை கஸ்தூரியின் பேச்சு வெறுப்பு அரசியலின் மையமாக உள்ளது. நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் சீமானுக்கு இழப்பு ஏற்படுவது நேரடியாக தெரிவதால் தனது கூடாரம் காலியாகி விடும் என்கிற பயத்தில் அவர் பேசுகிறார். வயநாட்டில் பிரியங்கா காந்தி வெற்றி பெறுவது உறுதி.

பிரியங்கா காந்தியின் அரசியல் வருகை நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் மோடி, அமித்ஷாவின் வெறுப்பு அரசியலுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். அவர் ராகுல் காந்திக்கு தளபதியாக இருப்பார். விஜய் கொள்கைக்கும், திமுக கொள்கைக்கும் வித்தியாசம் தெரியாமல் ஹெச்.ராஜா பேசுகிறார். தமிழர்களுக்காக பேசுபவர்கள் அனைவரும் ஒன்று என பாஜக கருதுகிறது. பாஜக தமிழர்களுக்கு எதிரான கட்சி. தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி என்பது நீண்டகால நிலையான உறவு" என்று மாணிக்கம் தாகூர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE