கொசுவை கட்டுப்படுத்தக் கோரி கொசு வலையைப் போர்த்திக் கொண்டு நூதன போராட்டம்

By பெ.ஜேம்ஸ் குமார்

குரோம்பேட்டை: கொசுவை ஒழிக்க வலியுறுத்தி, உடல் முழுவதும் கொசு வலையை அணிந்து கொண்டு மக்கள் விழிப்புணர்வு சங்கத்தினர் குரோம்பேட்டையில் இன்று நூதன போராட்டம் நடத்தினர்.

தாம்பரம் மாநகரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் சாக்கடைகள் தூர்வாரப்படாததால் பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் தேங்கி கொசு தொல்லை அதிகரித்துக் காணப்படுகிறது. அத்துடன் தற்போது அடிக்கடி பெய்து வரும் மழையின் காரணமாக, ஆங்காங்கே மழைநீருடன் சாக்கடையும் கலந்து, மேலும் உற்பத்தியாகிய கொசுக்களினால் பொதுமக்கள் டெங்கு மற்றும் பலதரப்பட்ட வைரஸ் காய்ச்சல் பரவி வருகின்றன.

இதனைத் தவிர்க்க மாநகராட்சி நிர்வாகம் ஆங்காங்கே தேக்கமடைந்த சாக்கடை நீர், மழைநீர் உள்ளிட்டவற்றை முறையாக அப்புறப்படுத்தி பொதுமக்களை நோய்ப் பாதிப்புகளில் இருந்து காக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் கொசுத் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அவற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டவில்லை.

இதனால், மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து மக்கள் விழிப்புணர்வு சங்கம் சார்பில் குரோம்பேட்டையில் இன்று கொசு வலையைப் போர்த்திக் கொண்டு நூதன போராட்டம் நடத்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE