தண்டவாளத்தில் மண் சரிவு: உதகை – குன்னூர் மலை ரயில் சேவை இன்று ரத்து

By ஆர்.டி.சிவசங்கர்

உதகை: தண்டவாளத்தில் மண் சரிந்து விழுந்ததால் உதகை - குன்னூர் இடையிலான மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு குன்னூர் பகுதியில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கனமழை காரணமாக, குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் மரப்பாலம் பகுதியில் மரம் முறிந்து விழுந்தது. எனவே வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கனமழையால் மரப்பாலம், காட்டேரி பூங்கா, கரும்பாலம், சேலாஸ் உட்பட 6 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. இதை அறிந்த வருவாய்த் துறையினர், நெடுஞ்சாலைத் துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் சாலையில் விழுந்த மண், பாறைகளை அகற்றினர். கனமழை காரணமாக குன்னூர் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.

மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே மலை ரயில் சேவை கடந்த மூன்று நாட்களாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கனமழை காரணமாக, குன்னூர் - வெலிங்டன் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால், உதகை – குன்னூர் இடையே இயங்கும் மலை ரயில் சேவை இன்று (நவ.5) ரத்து செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE