புதுச்சேரி போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி: அதிகாரிகளுடன் டிஐஜி ஆலோசனை

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரியில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதியுற்று வருகின்றனர். இது தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டப்படுவதால் இதற்கு தீர்வு காண பலதுறை அரசு அதிகாரிகளுடன் டிஐஜி இன்று ஆலோசனை நடத்தினார்.

புதுச்சேரி நகர் பகுதிகளில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வருகிறது. வார இறுதி நாட்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருவதால், ஊர்ந்து தான் வாகனங்கள் செல்ல வேண்டியுள்ளது. சாலை மற்றும் நடைபாதை ஆக்கிரமிப்பு ஒருபுறமென்றால், தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களும் போக்குவரத்து நெரிசலுக்கு ஒரு காரணமாக உள்ளது. புதுச்சேரியில் சாலைகளில் எப்படிச் சென்று திரும்புவது என்று செல்ல முடியாத அளவுக்கு தலைசுற்றி நிற்கிறார்கள் வாகன ஓட்டிகள்.

முக்கியமாக நகரப் பகுதிகள், இந்திரா காந்தி மற்றும் ராஜீவ்காந்தி சிக்னல்கள், கடலூர் சாலை என பல பகுதிகளிலும் வார இறுதி நாட்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இதற்கு உரிய தீர்வை எட்டவில்லை என அரசுக்கு எதிராக குற்றம் சாட்டுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே, மது போதையில் வாகனங்களை ஓட்டுவோரும் அதிகரித்து வருவதால் சர்வசாதாரணமாய் விபத்துகளும் நடக்கின்றன. இதற்கு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் வைத்த கோரிக்கையானது தற்போது அரசுக்கு எதிரான குற்றச்சாட்டாக மாறியுள்ளது.

இந்நிலையில் போலீஸ் டிஐஜி சத்யசுந்தரம் தலைமையில் அரசுத் துறை அதிகாரிகளுடன் கூட்டாக காவல்துறை தலைமையகத்தில், போக்கு வரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பது குறித்து இன்று ஆலோசனை நடத்தினர். இக்கூட்டத்தில் எஸ்எஸ்பி-க்கள் பிரவீன் திரிபாதி, கலைவாணன், நகராட்சி ஆணையர்கள் கந்தசாமி, சுரேஷ் ராஜன், பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் பார்த்த சாரதி, மின்துறை பொறுப்பு அதிகாரி ராஜ ஸ்ரீ, எஸ்பி-யான செல்வம் மற்றும் இன்ஸ்பெக்டர் நாகராஜன், சுரேஷ்பாபு ஆகியோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தை தொடக்கி வைத்து டிஜஜி சத்யசுந்தரம் பேசுகையில், "டெல்லியில் பணிபுரிந்தபோது போக்குவரத்து நெரிசலை தீர்க்க நடவடிக்கை எடுத்தேன். இங்கு போக்குவரத்து பிரச்சினை முக்கியமானதாக உள்ளது. அதனால் இக்கூட்டத்தை கூட்டியுள்ளேன். ஒவ்வொரு துறையினரும் பணிகளை மேற்கொள்ளும் போது முன்கூட்டியே தெரிவித்தால் அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கலாம். சிரமங்களை அறியவே இக்கூட்டத்தை கூட்டியுள்ளோம்" என்றார்.

அதையடுத்து அதிகாரிகள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். இந்தக் கருத்துகளின் அடிப்படையில் நகரின் போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காண முக்கிய முடிவுகளை எடுக்கவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE