‘நோயின்றி கரூர் - நோயின்றி 100 ஆண்டுகள்’ புத்தக வெளியீடு; நோயற்ற வாழ்வுக்கு விழிப்புணர்வு!

By க.ராதாகிருஷ்ணன்

கரூர்: நோயின்றி கரூர், நோயின்றி 100 ஆண்டுகள் புத்தக வெளியீடு, இணையதளம், விழிப்புணர்வு வாகன தொடக்கம் நடைபெற்றது.

கரூர் அருகேயுள்ள ராமேஸ்வரப்பட்டியைச் சேர்ந்தவர் வி.டீ.ரவீந்திரன் (48). கெமிக்கல் தொழில் செய்து வருகிறார். இவர் மனைவி சங்கீதா. மகள் கே.ஆர்.ரக்ஷனா, கோவை தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். ரக்ஷனா சிறிய வயதில் மரக்கன்று நடுதல், விதைப்பந்து தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு சேவைகளை நிகழ்ச்சிகளை மேற்கொண்டுள்ளார். ஆட்சியர், முதல்வர் ஆகியோரிடம் சமூக சேவைக்கான விருதுகளை பெற்றவர். மேலும் பிரதமரிடம் வாழ்த்து சான்று பெற்றுள்ளார்.

மகன் விஸ்வா 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவரும் சமூக அக்கறையோடு தின்பண்டங்கள் பாக்கெட்களில் ஸ்டாப்ளர் பின்களை பயன்படுத்தக் கூடாது எனவும் மாற்று வழிமுறைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தியும் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

குழந்தைகளின் சமூக அக்கறையுடனான சேவைகளை ஊக்குவித்து வந்த ரவீந்திரன் நோயி(ல்லா)ன்றி கரூரை உருவாக்கும் விதமாகவும், நோயின்றி 100 ஆண்டு அனைவரும் வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன் இன்று (நவ. 5ம் தேதி) கரூர் தலைமை அஞ்சலகம் முன்பு, புத்தக வெளியீடு, இணையதளம், விழிப்புணர்வு வாகன தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இது தொடர்பாக வாழையிலை, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டு, பதாகையை ஏந்தி பலர் பங்கேற்றனர்.

நோயின்றி நூறாண்டு என்ற புத்தகத்தை வெளியிட்டு ரவீந்திரன் வெளியிட்டு, இணையதளம், விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை தொடங்கி வைத்து இனிப்புகள் வழங்கி பேசியது: "மனிதன் உயிர் வாழ்வதற்கு உடல் ஆரோக்கியம் மிக முக்கியம். உலகில் சர்க்கரை நோயால் 42 கோடி, இதய நோயால் 20 கோடி, ரத்தக் கொத்திப்பால் 130 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் புற்றுநோயால் 97 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.

இந்நோயால் ஒரு நிமிடத்திற்கு 18 பேர் என்ற வீதத்தில் உயிரிழப்பு நடைபெறுகிறது. பொருட்களுக்கு கொடுக்கும் மதிப்பை கூட நம் உடலுக்கு கொடுப்பதில்லை. உணவு உண்கிறோமோ இல்லையோ மருந்து மாத்திரைகளை உண்கிறோம். இதனை மாற்றுவதற்காக பாடி மெயிடனன்ஸ் என்ற புத்தகத்தை வெளியிடுகிறேன். உண்ணும் உணவிலும், வாழ்க்கை முறையில் சின்ன, சின்ன மாற்றங்களை ஏற்படுத்தினாலே நோயின்றி 100 ஆண்டுகள் வாழ்வது சாத்தியம். முதலில் நம் உயரத்திற்கேற்ற எடையை பராமரித்தாலே பாதி நோயை குறைக்கலாம்.

இந்த புத்தகத்தை கரூரில் உள்ள 5,000 வீடுகளுக்கு விநியோகிக்க உள்ளோம். இதனை கடைபிடித்தால் 21 நாட்கள் முதல் 48 நாட்களில் நோய் குணமாகும். பரீட்சார்த்த முறையாக 50 வீடுகளில் உள்ள 100 பேருக்கு இந்த புத்தகத்தை வழங்கி அதில் உள்ளவற்றை கடைபிடித்ததில் பலரும் நோய்களில் விடுப்பட்டு வந்துள்ளனர்" என்று ரவீந்திரன் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE