ஆதிதிராவிடர் சிறப்புக்கூறு நிதியை முழுமையாக செலவு செய்யவும்: முதல்வர் ரங்கசாமி அறிவுறுத்தல்

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: ஆதிதிராவிடர்களுக்கான சிறப்புக்கூறு நிதியை சரியாக செலவிடுவதை உறுதிப்படுத்த முதல்வர் ரங்கசாமி தலைமையில் மாநில அளவிலான ஆதிதிராவிடர் வளர்ச்சிக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் முதல் கூட்டம் இன்று நடந்தது. இக்கூட்டத்தில், நடப்பாண்டுக்குள் ஆதிதிராவிடர்களுக்கான சிறப்புக்கூறு நிதியை செலவு செய்ய முதல்வர் ரங்கசாமி அறிவுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி அரசின் ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்த சுமார் ரூ.488 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியைக் கொண்டு 20 துறைகள் மூலம் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டங்களைக் கண்காணிக்கவும் ஆதிதிராவிடர் சிறப்புக்கூறு நிதி சரியாக செலவிடப்படுவதை உறுதிப் படுத்தவும் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான மாநில அளவிலான ஆதிதிராவிடர் வளர்ச்சிக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இக்குழுவின் முதல் கூட்டம் முதல்வர் ரங்கசாமி தலைமையில் சட்டப்பேரவையில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஆதிதிராவிடர் சிறப்புக்கூறு நிதியின் பயன்பாடு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ரங்கசாமி, "ஆதிதிராவிடர் சிறப்புக்கூறு நிதியை நடப்பாண்டிற்குள் விரைந்து செலவு செய்ய வேண்டும். திட்டங்கள் சரியான முறையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு சென்றடையவும் அரசுத்துறைகள் கவனம் செலுத்த வேண்டும். வளர்ச்சித் திட்டங்களுக்கும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்" என்று முதல்வர் அறிவுறுத்தினார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சாய் ஜெ.சரவணன் குமார், சட்டப்பேரவைத் துணைத் தலைவர் ராஜவேலு, சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா, வளர்ச்சி ஆணையர் மற்றும் அரசுச் செயலர் (நிதி) ஆசிஷ் மாதோவ்ராவ் மோரே, அரசுச் செயலர்கள் ஜவஹர், டாக்டர் முத்தம்மா, கேசவன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் இளங்கோவன் மற்றும் தொடர்புடைய பல்வேறு துறைகளின் தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE