பழமையான கட்டிட கூரை இடிந்து விழுந்து முதியவர் உயிரிழப்பு: காட்பாடியில் போக்குவரத்து பாதிப்பு

By வ.செந்தில்குமார்

வேலூர்: காட்பாடியில் இரும்பு உதிரி பாகங்கள் விற்கும் கடையின் மேல் கூரை இடிந்து விழுந்ததில் சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த முதியவர் உயிரிழந்தார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி தாராபடவேடு பகுதியில் இரும்பு உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை இயங்கி வருகிறது. இந்த கடையின் கட்டிடம் சுமார் 60 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. இந்த கடை அமைந்துள்ள சாலையின் வழியாக காட்பாடி கிளிதான்பட்டரை பகுதியை சேர்ந்த பாஸ்கர் (66) என்பவர் சைக்கிளில் இன்று காலை 11 மணியளவில் சென்று கொண்டிருந்தார். அப்போது, கடையின் முன்பக்க மேற்கூரை திடீரென இடிந்து சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பாஸ்கர் மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்து காரணமாக, காட்பாடி - வேலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், விபத்து குறித்து தகவலறிந்த காட்பாடி போலீசார், சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். விபத்து குறித்து, காட்பாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதனிடையே, கூரை இடிந்து விழுந்தபோது இரண்டு பெண்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கூரை இடிந்து விழுந்த கட்டிடம் பழமையானது என்பதால், அக்கட்டிடத்தை இடிப்பது தொடர்பாக வேலூர் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE