மறைமலை நகர்: மறைமலைநகர் ரயில் நிலையம் அருகே ஓர் வயதான தம்பதியர் நேற்று மாலை அவ்வழியாகச் சென்ற பல்லவன் அதிவிரைவு ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இத்குறித்த தகவலின் பேரில் ரயில்வே போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று உடல்களை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், இருவரும் காட்டாங்கொளத்தூர், நின்னக்கரை ரயில் நகர் பகுதியை சேர்ந்த முதியவர் செந்தில்வேன் (82) மற்றும் அவரது மனைவி பசும்பொன் (71) என்பது தெரிய வந்தது.
இருவருக்கும் சரியாக காது கேட்காததாலும், கவனக்குறைவாக ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்ததாலும் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இவர்களின் மகன் வெளிநாட்டில் இருப்பதால், அவரிடம் விசாரணை நடத்திய பின்னர் முழு தகவல் தெரியவரும் என ரயில்வே போலீஸார் தரப்பில் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.