ஊராட்சி தலைவர் மாநிலத்தின் மன்னராக முடியாது: உயர் நீதிமன்றம் கருத்து

By கி.மகாராஜன்

மதுரை: “ஊராட்சி தலைவர் மாநிலத்தின் மன்னராக முடியாது” என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் பாளையம் பட்டியைச் சேர்ந்த வி.பழனிச்சாமி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: “ரோசல்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பாளையம்பட்டியில் அருள்மிகு கருப்பசாமி கோயில் நிர்வாகியாக இருந்து வருகிறேன். கோயிலுக்கு சொந்தமான இடத்தில் அங்கன்வாடி கட்டிடம் கட்டப்படுகிறது. கோயில் இடத்தில் எந்தக் கட்டிடமும் கட்டக்கூடாது என உத்தரவிட வேண்டும்” என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை தனி நீதிபதி விசாரித்து, “மனுதாரர் குறிப்பிட்டுள்ள இடம் வருவாய் ஆவணங்களில் அரசு புறம்போக்கு நிலம் என்றுள்ளது. காலியிடத்தில் கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. கூடுதல் நிலத்தில் அங்கன்வாடி மையம் கட்டப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது சரியல்ல. இங்கு ஏற்கெனவே கட்டப்பட்ட கட்டிடம் தவிர வேறு கட்டிடம் கட்டக்கூடாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி ரோசல்பட்டி ஊராட்சித் தலைவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். முன்னதாக மேல்முறையீடு மனுவை தாமதமாக தாக்கல் செய்ததை அனுமதிக்கக்கோரி தனி மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியகெளரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், “ஊராட்சித் தலைவர் மனுவில் தெரிவித்து இருக்கும் கருத்துக்கள் கடும் கண்டனத்துக்குரியது. ஒரு ஊராட்சித் தலைவர் மாநிலத்தின் மன்னராக முடியாது.

நீதிமன்ற உத்தரவு குறித்து தேவையற்ற வார்த்தைகளை ஊராட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். அந்த உத்தரவை ஏற்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். இதற்காக அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அபராதத் தொகையை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு பெண் வழக்கறிஞர்கள் சங்கம் நடத்தும் குழந்தைகள் காப்பகத்துக்கு நவ.8-க்குள் வழங்க வேண்டும். இது தொடர்பாக நவ. 11-ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE