வத்தலகுண்டு சந்தையில் வாழைத்தார் வரத்து அதிகரிப்பு: தேவை உயர்வால் விவசாயிகளுக்கு லாபகரமான விலை!

By பி.டி.ரவிச்சந்திரன்

வத்தலகுண்டு: வத்தலகுண்டு மார்க்கெட்டில் நேற்று வாழைத்தார் வரத்து அதிகம் இருந்தபோதும் தேவையும் அதிகரித்ததால், விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைத்தது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு நகரில் வாரந்தோறும் திங்கள், வெள்ளி ஆகிய கிழமைகளில் வாழை மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும், அருகிலுள்ள மதுரை, தேனி, திருச்சி, கரூர் மாவட்டங்களில் இருந்தும் வத்தலகுண்டு மார்க்கெட்டிற்கு விவசாயிகள் விளைவித்த வாழைத் தார்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இங்கு தென் மாவட்டங்களில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் வியாபாரிகள் வந்து மொத்தமாக வாழைத் தார்களை வாங்கிச் செல்கின்றனர்.

தீபாவளிக்கு அடுத்த நாளான வெள்ளிக் கிழமை வாழைத்தார் மார்க்கெட் செயல்படவில்லை. இந்நிலையில், தீபாவளி முடிந்து துவங்கிய முதல் சந்தையில் நேற்று வாழைத் தார்களை அதிகளவில் அறுவடை செய்து விவசாயிகள் மார்க்கெட்டிற்கு கொண்டு வந்தனர். வரத்து அதிகரித்த நிலையிலும் தேவையும் அதிகரித்ததால் வியாபாரிகள் அதிக அளவில் வாழைத் தார்களை வாங்கிச் சென்றனர். இதன் காரணமாக விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைத்தது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு மார்க்கெட்டில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த செவ்வாழை உள்ளிட்ட வாழைத்தார்கள்.

நேற்று வத்தலகுண்டு வாழை மார்க்கெட்டில் செவ்வாழை ஒரு தார் அதிகபட்சமாக ரூ.650-க்கு விற்பனையானது. ரஸ்தாளி ரூ.400-க்கும், நாழிபூவன் ரூ.200 முதல் ரூ.400 வரையும், கற்பூரவள்ளி ரூ.150 முதல் ரூ.400 வரையும், நாட்டு வாழை ரூ.100 முதல் ரூ.400 வரையும் விற்பனையானது. வரத்து அதிகரித்ததால் விலை குறையும் என்ற அதிர்ச்சியில் இருந்த விவசாயிகளுக்கு, வியாபாரிகள் அதிகம் வாங்கிச் சென்றதால் கட்டுபடியான விலை கிடைத்ததில் மகிழ்ச்சியடைந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE