திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரிகள் பணியிடமாற்றம்: கண்டனம் தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

By இரா.நாகராஜன்

திருத்தணி: திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை தொடங்க உள்ள நிலையில், அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்யக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு இன்று கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் உள்ளது திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை. கடந்த 40 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த சர்க்கரை ஆலைக்கு, திருத்தணி, ஆர்.கே.பேட்டை உள்ளிட்ட திருவள்ளூர் மாவட்ட விவசாயிகளும் ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களின் சில பகுதிகளைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகளும் கரும்புகளை அனுப்புகின்றனர்.

இந்நிலையில், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இந்தாண்டுக்கான கரும்பு அரவை மிக விரைவில் தொடங்கப்பட உள்ளது. இச்சூழலில், சர்க்கரை ஆலையின் முதன்மை பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கரும்பு விவசாயிகள் மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை தொடங்க உள்ள நிலையில், அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்யக்கூடாது, ஊக்கத் தொகையை உடனடியாக கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டும், கரும்புக்கு டன்னுக்கு ரூ.5,500 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கூட்டுறவு சர்க்கரை ஆலை நுழைவு வாயில் முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், சங்கத்தின் மாநில பொருளாளர் பெருமாள், மாநிலக் குழு உறுப்பினர் ஜெயச்சந்திரன், மாவட்டச் செயலாளர் ஸ்ரீநாத் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் பங்கேற்று, கோரிக்கை முழக்கமிட்டனர். தொடர்ந்து, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் ஜெ.மலர்விழி, கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE