நான் பொறுப்பேற்றபோது தமிழக பல்கலைக்கழகங்கள் நிலை மோசமாக இருந்தன: துணை வேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து

By KU BUREAU

உதகை: 2021-ம் ஆண்டு நான் பதவியேற்றபோது தமிழக பல்கலைக்கழகங்கள் மோசமான நிலையில், ஒருங்கிணைப்பு இல்லாமல் இருந்தன என துணை வேந்தர்கள் மாநாட்டில்ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் உதகை ராஜ்பவனில் தமிழ்நாடு மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாடு நேற்று தொடங்கியது. தமிழக ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி மாநாட்டை தொடங்கி வைத்தார்.

ஆளுநரின் செயலாளர் கிர்லோஸ் குமார் வரவேற்றார். பல்கலைக்கழக மானிய குழு தலைவர் ஜெகதீஷ்குமார், காரக்பூர் ஐஐடி முன்னாள் இயக்குநர் பார்த்த பிரதி சக்கரபோர்த்தி, ஏ.ஐ.சி.டி.இ. உலகளாவிய மனித மதிப்புகளுக்கான தேசிய குழு தலைவர் சரண், சிஸ்கோ நிர்வாக ஆலோசகர் ஸ்ருதி கண்ணன் ஆகியோர் சிறப்புவிருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

மாநாட்டை தொடங்கி வைத்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: 2021-ம் ஆண்டு நான் ஆளுநராக பொறுப்பேற்ற போது, தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மிகவும் மோசமான நிலையில் இருந்தன. சில பிரச்சினைகள் இருந்தன. ஒவ்வொரு பல்கலைக்கழகமும் மற்ற பல்கலைக்கழகங்களுடன் தொடர்பின்றி தனித்தனியாக செயல்பட்டு வந்தன. அவற்றின் தரமும் குறைந்து காணப்பட்டது. இது எனக்கு ஏமாற்றம் அளித்தது. இதை சரி செய்து, ஒன்றிணைக்கவே துணை வேந்தர்கள் மாநாடு 3ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.

புதிய தேசிய கல்விக் கொள்கைதான் நமது எதிர்காலம். நமது நாடு தற்போது பெரிய மாற்றத்துக்கு தயாராக உள்ளது. உலகம் வேகமாக மாறிவரும் நிலையில் நாம் பின்தங்கி உள்ளோம். சுதந்திரத்துக்குப் பிறகு பொருளாதார வளர்ச்சியில் 6-ம் இடத்தில் இருந்த நாம், 11-ம் இடத்தில் பின் தங்கிவிட்டோம். தற்போது 5-ம் இடத்துக்கு முன்னேறி உள்ளோம். விரைவில் 3-ம் இடத்தை எட்டிப் பிடிப்போம்.

தவறான கல்விக் கொள்கையால் படித்து முடித்த இளைஞர்கள் வேலைக்காக கையேந்தும் நிலையில் உள்ளனர். கல்வி, இளைஞர்களை திறன்மிக்கவர்களாகவும், தன்னம்பிக்கை உள்ளவர்களாகவும் உருவாக்க வேண்டும். ஆனால்,அதை தவறவிட்டு விட்டோம். இதுதொடர்ந்தால் இளைஞர்களின்எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். பல்கலைக்கழகங்கள் நீண்ட நீடித்த கல்விக் கொள்கையை கொண்டு வர வேண்டும். புதியகல்விக் கொள்கை புதிய இந்தியாவை உருவாக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த மாநாட்டில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாநிலப் பல்கலைக் கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்தியப் பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த 35 துணைவேந்தர்கள் பங்கேற்றுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE