செங்கல்பட்டு: கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், 21-வது கால்நடை கணக்கெடுப்புப் பணியினை செங்கல்பட்டு ஆட்சியர் அருண்ராஜ் இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் கால்நடை பராமரிப்புத் துறை, காஞ்சிபுரம் மண்டல இணை இயக்குநர் ஜெயந்தி, துணை இயக்குநர் சுந்தரேசன், செங்கல்பட்டு கோட்ட உதவி இயக்குநர் சாந்தி, கால்நடை உதவி மருத்துவர்கள் மற்றும் கால்நடை ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
இது குறித்து ஆட்சியர் அருண்ராஜ் கூறியதாவது: "கால்நடை கணக்கெடுக்கும் பணி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மத்திய அரசின் சார்பில் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் மேற்கொள்ளப்படுகிறது. கால்நடைகள் தொடர்பான வளர்ச்சி திட்டங்கள் மற்றும் கால்நடைகளின் நலன் பேணுவதற்கு சரியான தரவுகள் தரும் பொருட்டு கால்நடை கணக்கெடுப்புப் பணி நடைபெறுகிறது. இதில் வீடுகள், கடைகள், தோட்டம் மற்றும் பண்ணைகளில் உள்ள மாடு, எருமை, ஆடு, குதிரை, நாய், பன்றி, கோழி, வாத்து போன்ற அனைத்து வகையான கால்நடைகளும் கணக்கெடுக்கப்படும்.
தற்போது நாடு தழுவிய 21வது கால்நடை கணக்கெடுப்புப் பணி பிப்ரவரி 2025 வரை நடக்கிறது. இதற்கு மாவட்டத்தில் 160 கணக்கெடுப்பாளர்களும், 34 மேற்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். கணக்கெடுப்பில், கால்நடை வளர்ப்போரின் பெயர், முகவரி, ஆதார் எண், செல்போன் எண், நில அளவு, முக்கிய தொழில், கல்வித்தகுதி, கால்நடைகளின் எண்ணிக்கை, இனம், வயது, பாலினம், பயன்பாடு குறித்த தகவல்கள் சேகரிக்கப்படும்.
தொடர்ந்து, கால்நடைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருந்துகளும், தடுப்பூசிகளும் வழங்கப்படவுள்ளன. அதேபோல், எண்ணிக்கையில் குறைவாக உள்ள கால்நடை இனங்களைக் கண்டறிந்து, அந்த இனங்களை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, மாவட்டம் முழுமைக்கும் கால்நடைகள் கணக்கெடுப்பு விரைவாக நடத்தப்பட உள்ளதால், வீடு தேடி வரும் கால்நடை மற்றும் கணக்கெடுப்பாளர்களுக்கு தக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்று ஆட்சியர் கூறினார்.
» அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி ஶ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்