கரூரில் இன்று காவிரி மகா ஆரத்தி பெருவிழா

By KU BUREAU

கரூர்: அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம், அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில், காவிரி நதியை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அன்னை காவிரி விழிப்புணர்வு துலா தீர்த்த ரத யாத்திரை ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

நடப்பாண்டு, கர்நாடகா மாநிலம் குடகு பகுதியில் உள்ள தலைக்காவிரியில் இருந்து 7 கலசங்களில் எடுக்கப்பட்ட காவிரி துலா தீர்த்தத்துடன், சுவாமி ராமானந்தா மகராஜ் தலைமையில் அக். 20-ம் தேதி ரத யாத்திரை தொடங்கியது. ரதத்துடன் 14 சந்நியாசிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். வரும் 13-ம் தேதி ரத யாத்திரை பூம்புகாரை சென்றடைந்ததும், அங்கு கடலில் புனித தீர்த்த விசர்ஜனம் செய்யப்பட்டு யாத்திரை நிறைவடைகிறது.

இந்த ரத யாத்திரை கரூர் மாவட்டத்துக்கு நேற்று வந்தது. கரூர் முனியப்பன் கோயில் முன்பு ரத யாத்திரைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, கரூர் பசுமடம், காந்திநகர், பசுபதிபாளையம் ஆகிய இடங்களில் ரத யாத்திரைக்கு, அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு, வழிபாடு நடைபெற்றது. ஏற்பாடுகளை சங்கத்தின் கரூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் சிவகற்பகாம்பாள், சங்கர சரஸ்வதி சுவாமிகள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

இந்நிலையில், அகில பாரதிய சந்நியாசிகள் சங்க நிறுவனர் சுவாமி ராமானந்தா மகராஜ் தலைமையில், கரூர் காவிரி குடும்பம், கரூர் அனைத்து ஆன்மிக அமைப்புகள் சார்பில் நெரூர் சதாசிவ பிரமேந்திராள் அதிஷ்டானம் காவிரி படித்துறையில் இன்று (நவ. 4) மாலை 6 மணியளவில் காவிரி மகா ஆரத்தி பெருவிழா நடைபெறுகிறது. முன்னதாக, காவிரி அம்மன் நகர்வலம் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் முன்பு பால்குடம், கோலாட்டத்துடன் தொடங்கி, கோடீஸ்வரர் சுவாமி கோயில் வரை நடைபெற உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE