பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராமத்தில் 2 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் மக்கள் தவிப்பு

By KU BUREAU

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே பறவை களுக்காக பட்டாசு வெடிக்காமல் தியாகம் செய்யும் கிராம மக்கள் கடந்த 2 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அ.மேலை யூர் ஊராட்சி கொள்ளுக்குடிப்பட்டி கிராமத்தில் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் அமைந்துள்ள வேட்டங்குடி சரணாலயத்துக்கு வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பறவைகள் வருகின்றன. பறவைகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க கொள்ளுக்குடிப்பட்டி கிராம மக்கள் கடந்த 52 ஆண்டுகளாக தீபாவளி, சுப நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிப்பதில்லை.

இந்நிலையில், இக்கிராமத் துக்கு விநியோகிக்கப்படும் குடி நீர் உவர்ப்பாக இருந்ததால், மக்களின் கோரிக்கையை ஏற்று 4 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.5 லட்சத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. அங்கு ஒரு குடம் ரூ.2-க்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன்பு சுத்திகரிப்பு இயந்திரம் பழுதடைந்தது.

இது குறித்து இக்கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் கூறுகையில், ‘எங்கள் பகுதி முழுவதும் நிலத்தடி நீர் உவர்ப்பாக உள்ளது. கடந்த காலங்களில் கண்மாய் நீரை எடுத்து பயன்படுத்தி வந்தோம். சரணாலயமாக அறிவிக்கப்பட்டதில் இருந்து பறவைகளுக்காக கண்மாயில் இருந்து தண்ணீர் எடுப்பதில்லை. எங்களது குடிநீர் பிரச்சினையை தீர்க்க சுத்திகரிப்பு நிலையம் அமைத்து கொடுத்தனர். அது பழுதடைந்து 2 ஆண்டுகளாகியும் சரி செய்யவில்லை. இதனால் குடிக்க, சமைக்க ஒரு குடம் குடிநீர் ரூ.15-க்கு விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம்’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE