அரசியல் நாடகங்களை புரிந்துகொள்ள நாளிதழ்களை படியுங்கள்: பாஜக செய்தி தொடர்பாளர் அறிவுறுத்தல் 

By எம்.மகாராஜன்

சென்னை: தமிழகத்தில் நடக்கும் அரசியல் நாடகங்களை புரிந்துகொள்ள ஒவ்வொரு வீட்டிலும் தமிழ் நாளிதழ்களை வாங்கி படிக்குமாறு மக்களுக்கு தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழக அரசியலில் மாற்றம் வேண்டும் என்று தற்போது மக்களிடையே ஏற்பட்டுள்ள அமைதிப் புரட்சியின் காரணமாக, அனைத்து அரசியல் கட்சிகளும் ஒவ்வொரு திசையில் வெவ்வேறு கோணங்களில் தேர்தல் அரசியலுக்கான வாக்கு வங்கி வேட்டைக்கு தயாராகி வருகின்றன. ஆனால் அதற்காக தமிழகத்தின் வளர்ச்சியையும் மக்களின் நலன்களையும் புறந்தள்ளிவிட்டு தேர்தலுக்காக அதிகார போட்டியை நடத்தி வருகின்றனர். தமிழக முதல்வரும் போராட்டங்கள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, அரசு துறைகளில் உள்ள நிர்வாக சீர்கேடுகள் போன்றவற்றை பற்றி கவலைப்படாமல் 2026 தேர்தலில் 200 தொகுதிகளை திமுக வெல்ல வேண்டும் என தயாராகி விட்டார்.

இவர்கள் அனைவரும் மக்களிடம் போதிய அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தாமல் கொள்கை, கோட்பாடுகளின்றி அரசியல் வியாபாரத்துக்காக தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். பாசிசமா? பாயசமா? மதவாதமா? மிதவாதமா? மதுவிலக்கு மாநாடா? மகளிர் மாநாடா? என்று தமிழக மக்களை குழப்பி வரும் தலைவர்களை தமிழக மக்கள் முழுமையாக புரிந்து கொள்ளாமல் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படாது.

இந்த நாடகங்களை எல்லாம் முழுமையாக புரிந்துகொள்ள வேண்டுமானால் ஒவ்வொரு வீட்டிலும் ‘தினத்தந்தி’, ‘தினமலர்’, ‘தினமணி’, ‘இந்து தமிழ் திசை’, போன்ற தமிழ் நாளிதழ்களை மக்கள் வாங்கி படிக்க வேண்டும். நாளுக்கு ஒரு பேச்சு பேசும் அரசியல் வியாபாரிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், தமிழகத்தில் நல்லாட்சி அமையவும் நாளிதழ்களை படிக்க வேண்டியது அவசியம். அதன்மூலமே அரசியல் நாடகங்களை மக்கள் புரிந்துகொள்ள முடியும். அன்றாட அரசியல் நிலவரங்களை ஒவ்வொரு குடும்பத்தினரும் அறிந்து கொண்டால்தான் சமூக நீதியை நம்மால் நிலைநாட்ட முடியும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE